மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தவுக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமான ஒரு சம்பவம் என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு இடையில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களின்போது, அவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளுக்கான காரணம், நாட்டின் நல்லிணக்கத்திற்கு அவர் தடையாக இருப்பதே எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஸ மதங்களுக்கு இடையே பல குழப்பங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காய முயற்சித்தார். அப்போது அவர் செய்த வினைகளுக்காகவே தற்போது எதிர்ப்புகள் எழுவதாகவும் கூறினார்.
மேலும், வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கை மக்களைப் போன்று அமைதியானவர்கள் இல்லை. அவர்கள் நியாயத்தின் பக்கமே இருப்பார்கள். அநீதியைக் கண்டு அமைதியாக போகமாட்டார்கள் எனவும் அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.