
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் நிர்மாண வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சி ஆராய்ந்து வருகின்றது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் நாம் கருத்துகளை வெளிப்படுத்துவோம். .
நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் கடந்த 2014ம் ஆண்டு நாம் தீர்மானம் எடுத்தோம். அதற்கமைய கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு முழுமையான ஆதரவை வழங்கினோம்.
அதேபோல் கடந்த பொதுத் தேர்தலின் போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம். அந்த முயற்சிகள் சரியாக முன்னெடுத்து செல்லப்படுகின்றன. அவ்வாறான நிலையில் இப்போது நாம் மேலும் பலமான வகையில் செயற்பட வேண்டும்.
இப்போது நாம் பாராளுமன்றத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தை பலப்படுத்தும் வகையில் அரசியலமைப்பை உருவாக்க அரசியலமைப்பு சபையை உருவாக்கியிருக்கின்றோம்.
இந்த நாட்டு மக்களுக்கு சரியான பொருளாதார வேலைத்திட்டங்களை வழங்கவேண்டிய தேவை உள்ளது. எமது இளைஞர் சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்து அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அந்த வேலைத்திட்டத்தை நாம் சரியாக முன்னெடுத்து வருகின்றோம். அடுத்த ஒரு சில மதங்களுக்குள் சீனா, ஜப்பான், சிங்கபூர், இந்தியா போன்ற நாடுகளுடன் நாம் செய்துகொள்ளவுள்ள வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
அதேபோல் ஐரோப்பிய நாடுகளுடன் உறவை பலப்படுத்தவும், ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இவை மீண்டும் எமக்குக் கிடைக்கும் என்ற எதிபார்ப்பு எமக்கு உள்ளது.
இந்தியா போன்ற நாடுகளை நாம் தக்கவைத்து செயற்படுவது எமக்கு நல்ல பொருளாதரா வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். எவருடனும் தனிப்பட்ட முறையில் விவாதிக்க அவசியம் இல்லை. பாராளுமன்றத்தை அதற்காக பயன்படுத்தி கொள்ள முடியும்.
அன்று மஹிந்த ராஜபக்சவுக்கு பந்தம் பிடித்தவர்கள் இன்றும் அவருக்கு பந்தம் பிடித்து நாட்டை குழப்புகின்றனர். ஆனால் அதற்கு அஞ்சி நாட்டை குழப்ப நாம் அனுமதிக்க மாட்டோம்.
மஹிந்தவுக்காக மேளமடிக்கும் நபர்களுக்கு நாம் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை. நாம் மக்களுக்கு பதில்கூற வேண்டும். இந்த நாட்டை யார் சீரழித்தனர் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டு மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும். யாரால் மின்சாரம் கொடுக்க முடியாமல் போனது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரிவினையுடன் நாட்டில் ஆட்சிசெய்ய நாம் தயாராக இல்லை. கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் நபர் நான் இல்லை. எதிர்காலத்தை எண்ணியே எனது வேலைத்திட்டங்கள் அனைத்தும் அமைந்திருக்கும்.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை சீரழிக்க நான் இடமளிக்க மாட்டேன் என்றார்.