
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொது எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு ஹைட் மைதானத்தில் பாரிய கூட்டமொன்றை பொது எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிச்சயமாக பங்கேற்பார் என டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை விரட்டியடிக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவது நோக்கமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியைத் தவிர்ந்த வேறும் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.