மஹிந்த அணிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

214

அதி உயர் சபையாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி பொது எதிரணி உறுப்பினர்களுக்கு அதியுச்ச தண்டனையை வழங்குமாறு கோரி ஐ.தே.க. எம்.பிக்கள் சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பவுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் மீது கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது கடும் அமளிதுமளி ஏற்பட்டது. இதையடுத்து சபை நடவடிக்கைகள் ஓகஸ்ட் 4ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டன.

அதன்பின்னர் ‘கோரம்’ மணியை ஒலிக்கச்செய்து நாடாளுமன்றத்தைக் கூட்டிய பொது எதிரணியினர் சபாநாயகர் ஒருவரையும் நியமித்தது. அதன் பின்னர் இரண்டு எம்.பிக்கள் உரையாற்றினர். இந்தச் சந்தர்ப்பத்தில் பிரசன்ன ரணதுங்க எம்.பி.ஜனாதிபதி ஆசனத்திலும் அமர்ந்தார்.

ஜனாதிபதியின் கதிரையில் எந்தவொரு எம்.பியும் அமர்வதில்லை. ஜனாதிபதி சபைக்கு வராவிட்டாலும் அவருக்காகவே அந்தக் கதிரை ஒதுக்கப்பட்டிருக்கும். அத்துடன், சபாநாயகர் கதிரையையும், சபாபீடத்தையும் எவரும் அணுகக்கூடாது. இந்த விடயம் பற்றி அரசமைப்பிலும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவேதான், சபையை அவமதித்த பொது எதிரணியினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.தே.க. எம்.பிக்களால் சபாநாயகரிடம் கோரப்படவுள்ளது.

SHARE