மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர்அரசியலில் புது ஓட்டையை உருவாக்குவதாக ம.வி.முன்னணியின் உறுப்பினர் விமல் ரட்நாயக்க தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் விடுதலை முன்னணிக்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் எந்த டீலும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்குமே டீல் உள்ளது. கடந்த கால கடவுச்சீட்டு விவகாரங்களில் இது தெளிவாகியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் செயற்றிட்டமானது கூட்டு எதிர்க்கட்சிக்கும் சாதகமாக இருப்பதாக பரவலான தகவல்கள் வெளியாகின. ஆனால் இது முற்றிலும் பொய்யான கருத்து.
நாட்டில் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.சு.க என்ற கட்சிகள் ஆட்சியில் இருந்த போதும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வந்த போதும், நம்பகத்தன்மையான செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
இருப்பினும் பாராளுமன்னற்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ம.வி.முன்னணி முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தார்.
மேலும், குறித்த அலுவலகத்தினால் இலங்கையின் முப்படையினருக்கும் வழக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மஹிந்த தலைமையிலான இவர்கள் அரசியலில் புது ஓட்டையை உருவாக்குவதாகவும் சாடினார்.
கடந்த காலங்களில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு இது ஏற்ற வழிமுறை எனவும் அவர்தெரிவித்தார்.
தொடர்ந்து இதன்போது கருத்து தெரிவித்த கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி,
கோப் குழுவுக்கான காரியாலயம், ஊழியர் பற்றாக்குறைகள், மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றை நிவர்த்திசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே தாம் முன்வைத்ததாகவும், சொகுசு வாகனம் வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைக்கவில்லை என்றும் கூறினார்.
மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் ம.வி.முன்னணியால் வழங்கப்பட்ட வாகனமே போதும், வேறு எந்த சொகுசு வாகனமும் தேவையில்லை எனவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்