மஹிந்த பிரதமரானால் சிறுபான்மையினம் மீண்டும் ஒடுக்கப்படும்.

291

முப்பது வருட காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதோடு, காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதையாக, மஹிந்த தான் யுத்தத்தை வெற்றிகொண்ட வீர தீரக் கதாநாயகனென அவரைப் போற்றிப் புகழ்ந்தவர்களும், இப்போதும் அவ்வாறே அவரைப் போற்றிப் புகழ்பவர்களும் நிறையப்பேர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

blogger-image--1644831898
உண்மையில் யுத்தம் முறியடிக்கப்படுவதற்குப் ‘பிரேமதாஷ’ அவர்கள் ஆரம்பத்திலேயே மேற்கொண்ட சூழ்ச்சிகரமான நடவடிக்கைகள் தான் மிகப் பிரதானமான காரணிகளாக விளங்கியிருக்கின்றன.
தமிழ் மக்களிடம் தமிழ் ஈழத்துக்கான ஆணையைப் பெற்று நாடாளுமன்றஞ் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அவ்வாணைக்கு விசுவாசமாகச் செயற்படத் தவறியிருந்தார்கள். ஒரேயொரு நாடாளுமன்ற அமர்வில் மட்டும் பங்குபற்றி ‘எமக்கு எமது மக்கள் தனித் தமிழ் ஈழம் அமைத்துத் தருமாறு ஏகோபித்து ‘ஆணை வழங்கியுள்ளார்கள். எனவே அம்மக்களின் ஆணைக்கு விசுவாசமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவர்கள் எமக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றிக் கொடுப்பது எமது தலையாய பணி என்னுங் கருத்தை உலகமும் அறியும்வகையில் முரசறைவித்துவிட்டு அதன் பின்னர் அவர்களால் ‘ஸ்ரீலங்கா வேறு நாடு தமிழ் ஈழம் வேறு நாடு’ என முன்வைக்கப்பட்ட கருத்தோவியத்துக்கமைவாகத் தமிழர் தாயகத்தில், வடக்கின் யாழ்ப்பாணத்திலோ அல்லது கிழக்கின் திருமலையிலோ வங்கச் சிங்கம் முஜிபர் ரஹ்மான் பாணியிலே தமிழ் ஈழத்துக்கான அரசியல் நிர்ணய சபையை உருவாக்கித் தமது தாயக ஆட்சிக்கான அரசியல் சட்டத்தையும் வரைந்து தம்முடைய நேர்மைத்திறனையும், தைரியத்தையும் வெளிக்கொணர்ந்திருக்க வேண்டும். அத்தோடு பாரத உப கண்டத்தின் அடிமை விலங்கொடித்த உத்தமனார் காந்தி வழியிலே ஸ்ரீலங்கா ஆளுவோருக்கெதிரான யுத்தங்களை மேற்கொண்டிருக்கவும் வேண்டும்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவ்வாறு செயற்படாதது மட்டுமல்ல, ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்திலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 1977ம் ஆண்டு தேர்தலிலே பெற்றுக் கொண்ட ஆசனங்களை விட அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதனால் அவ்வமைப்பினால் எதிர்க்கட்சியாகவும் அவ்வமைப்பின் செயலாளர் நாயகமான ‘அமிர்தலிங்கம்’ அவர்களுக்கு ‘எதிர்கட்சித் தலைவர்’ ஆகும் வாய்ப்பும் எதிர்பாராதவிதமாக அமைந்தது.
கூட்டமைப்பாரின் இப் பதவி சுகத்தைச் சாதகமாக வைத்து, அவ்வரசில் பிரதமர் பதவி வகித்த பிரேமதாஷ அவர்கள் அவ்வமைப்பாரின் நீண்ட கால வாக்கு நலனைத் தாம் தமிழ் மக்களிடம் பெற்றுக்கொண்ட மிகப் பொறுப்பு வாய்;ந்த ‘தமிழ் ஈழம்’ என்னும் ஆணைக்கு விரோதமாகவும், அவ்வாணையைக் காட்டிக்கொடுத்து அதற்குத் துரோகமிழைக்கும் விதமாகவும் மிகவும் தந்திரோபாயங்களுடன் பயன்படுத்திக்கொண்டார். இதனால், ஒற்றையாட்சியின் கீழான சமஅந்தஸ்து, சமஷ்டி அமைப்பு முறையிலான ஆட்சியமைப்பை வலியுறுத்திக்கொண்டே, இலங்கையின் முதலாளித்துவ வலையமைப்புக்குள்ளும், உலக முதலாளித்துவ வலைப் பின்னலுக்குள்ளும், அமெரிக்க ஏகாதிபத்திய வேட்டைப் பொறிக்குள்ளும் இலங்கைத் தமிழினத்தைச் சிக்க வைத்தமையின் விளைவாக உருவான பெறுபேறுகளைப் போலல்லாது, ‘தனி நாடு’ என்னும் ஆணைக்குள்ளும் இவ்வலையமைப்புகளுக்குள் ‘இலங்கைத் தமிழ் மக்கள்’ சிக்க வைக்கப்பட்டதனால் முன்னெப்போதையும் விடத் தமது எதிர்கால வாழ்வு தொடர்பில் பாரதூரமானதும், பாதகமானதுமான விளைவுகளைத் தமிழ் மக்கள் எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இக் கள நிலவரத்தில் வடபகுதி இளைஞர்களின் ஆயுதந் தரித்த போராட்டத்தை முறியடிப்பதற்குச் சர்வதேச அளவிலான அமெரிக்க சார்பு, அமெரிக்க எதிர்ப்பு நிலையின் வழமையான வடபகுதியின் அரசியல் பின்னணியை இறுகப்பற்றிக்கொண்ட பிரதமர் பிரேமதாஷ அவர்கள் ஆயுததாரிகளில் ஒரு பகுதியினரை இராணுவத்தினரோடு இணைய வைத்தார். இவ்விடத்தில், இலங்கையை ஆள்வோர் எவராகவிருந்தாலும் அவ்வாள்வோர் மீதும் குடிமக்கள் என்னும் அவ்வாள்வோரின் அரசியல் கட்சிகள் மீதும் அவ்வாள்வோரின் அரசியல் கட்சிகள் மீதும் குடிமக்கள் என்னும் தோற்றப்பாட்டில் இராணுவத்தினர் வெறுப்பும், குரோதமும் உள்ளவர்களாகவே விளங்கி வருகின்றார்கள்.
இந்நிலையானது 1971ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முன்னெடுக்கப்பட்ட ‘றோகண விஜேவிர’ அவர்களின் கிளர்ச்சியின் பின் மேலும் வலுப்பெற்றது. இவ்விடயத்தைச் சகல ஆட்சியாளர்களும் புரிந்துகொண்டிருப்பார்கள். எனவே இவ்வாட்சியாளர்களின் வரிசையில் பிரேமதாஷ அவர்களும் இவ்வியல்பைப் புரிந்துகொண்டு, கடமையின் நிமித்தம் கட்டுப்படுத்தி இராணுவத்தினரை மிகவும் கண்காணிப்புக்காளாக்கியபோதும் அவர்களின் இவ்வரசியல் சுபாவத்தைப் பயன்படுத்தி வடபகுதி ஆயுததாரிகளில் ஒரு பகுதியினரை இராணுவத்தோடு இணையவைத்தார். பிரேமதாஷ அவர்களின் இந்நடவடிக்கையே தாம் கைப்பற்றி வைத்திருந்த யாழ்ப்பாணத்தை இழப்பதற்கும் அவர்களின் ஆயுதப் போராட்டம் முறியறிக்கப்படுவதற்கும் அடிப்படையானதும், பிரதானமானதுமான காரணியாகவும் இருந்தது.
இதன் பின் புலிகள் அமைப்பானது, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது சந்திரிகாவிடமிருந்து ஆட்சியதிகாரமானது ‘ரணில் விக்கிரமசிங்க’ தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சிக்கு கைமாற்றப்பட்டபோது ‘இடைக்கால நிர்வாகம், பேச்சு வார்த்தை’ என ரணில் காட்டிய மாயவலைக்குள் மாட்டுப்பட்டு, யுத்த நிறுத்தத்துக்கும் இணங்கி நின்றபோது, பேச்சுவார்த்தையைக் கூட்டாக வைத்து ரணிலும் அவருடைய பரிவாரங்களும் அடிக்கடி ஹெலிகளில் கிளிநொச்சியை வட்டமிட்டமையும், விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர்களின் இருப்பிடங்களை அவர்கள் அவதானித்துச் சென்றமையும், அவர்களோடு இணைந்து வந்த ‘தேசப்பட விற்பன்னர்கள்’ படம் வரைந்து சென்றமையும் மேற்றரப்பட்ட மாவட்டங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப்புலி அமைப்பின் முக்கியஸ்தர்களை அவர்கள் இருந்த இடங்களை இலக்குவைத்து விமானக்குண்டு வீச்சுகளை மேற்கொண்டு கொன்றொழித்தமைக்குக் காரணிகளாக அமைந்திருந்தன.
எனவே, காகம் இருக்க ஏற்கனவே இளகியிருக்கும் பனம் பழம் விழுந்த கதையாக மஹிந்த அவர்கள் ஆட்சியிலிருக்கும்போது யுத்தம் முறியடிக்கப்பட்டமையால் அவர் தான் யுத்தத்தை முடித்துவைத்த தீரமிகு கதாநாயகனென்னும் பொதுவான ஓர் அபிப்பிராயம் அன்று தொட்டு இன்றுவரை நிலவிவருகின்றது உண்மையில் 1977ல் ஆட்சி அமைத்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களை ஜனாதிபதியாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P) அரசாங்கத்தின் பிரதமராகவிருந்த ‘பிரேமதாஷ’ அவர்களின் அபாரமான அரசியல் சாணக்கியத்தின் பாற்பட்டதும், தந்திரோபாயத்தின் பாற்பட்டதுமான தமிழ் ஈழத்துக்கான மிகவும் பொறுப்பு வாய்ந்ததும், தூரநோக்கோடும் உள்ளீர்க்கப்படவேண்டியது. மான ஆணையைத் தமிழ் கூட்டமைப்பார் ‘ஏனோ தானோ’ என்னும் மனோபாவத்தோடு துஷ்பிரயோகம் செய்தமையோடு, காட்டிக்கொடுத்தமையும் வர்க்க நலனுக்கும் ஏகாதிபத்திய ஏதேச்சாதிகாரத்துக்குத் துணை போனமையும், வடக்கின் ஆயுததாரிகளில் ஒரு பகுதியினர் இராணுவத்தோடு இணைந்தமையுமே புலிகளின் தோல்விக்கான பிரதான காரணிகளாக இருந்திருக்கின்றன. பின்னர் ‘ரணில்’ அவர்களுடைய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட இடைக்கால நிர்வாகம், பேச்சுவார்த்தை என்னும் பூச்சாண்டிகளுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பினர் உடன்பட்டுத் தாமிருக்கும் இடங்களை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்தமை அவர்களின் தோல்விக்கான நிஜமான துணைக்காரணியாகும். இவ்விடத்தில் ஆட்சி மாறினாலும் ‘குண்டு போடுபவர்கள்’ஒரே நபர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவது மிகவும் இன்றியமையாதது.
யுத்தத்தின் பின்னர் குற்றவாளியாகச் சர்வதேசத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மஹிந்த அவர்கள் ‘யுத்தத்தை வெற்றிகொண்டவர்’ என்னும் போலிப் பிம்பத்தை பெற்றுக்கொண்டமையினால், அப்பிம்பத்தை நிஜமாக்க முனைந்து சர்வதேசப் பார்வைக்கு மதிப்பளித்து, அச்சர்வதேச முகாமைத் திருப்திப்படுத்த முனையாமல் சிங்களக் கடும் போக்காளர்களையும், மக்களையும் திருப்திப்படுத்தும் தன்முனைப்பு மேலோங்கியவராகத் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார்.
ஒரு கையால் லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இடதுசாரிக் கட்சித் தலைவர்களையும், மறு கையால் ‘சிஹல உறுமய’ போன்ற சிங்களக் கடும்போக்கு அமைப்புக்களையும் அணைத்து வைத்துக்கொண்டு முற்றுமுழுதாக முரண்பட்டதும், மிகுந்த தந்திரோபாயத்தோடு இணைந்ததுமான தமிழர் விரோத ஆட்சியை நிர்வகித்து வந்தார். முதுபெரும் இடதுசாரித் தலைவரும், இடதுசாரித் தலைவர்கள் தடம் புரண்டு சென்றபோதும் வாய்மை காத்தவருமான ‘வாசுதேவ நாணயக்கார’ அவர்களை தேசிய மொழிகள் அமுலாக்கல் சமூக நல்லிணக்க அமைச்சராக நியமித்தமை மஹிந்த அவர்களின் உச்சக்கட்டத் தந்திரோபாயமேயெனக் கொள்ளப்படவும் வேண்டும்.
தமிழர் நலன் சார்ந்த (தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைத்தல் அரச நிர்வாக அலகுகளில் சிங்கள தமிழ் மொழிகளின் சம பிரயோகம்) நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மஹிந்தாவின் ஒரு கையினால் அரவணைக்கப்பட்ட இடதுசாரிகள் பரிந்துரைத்தபோது, மறு கையினால் அணைக்கப்பட்ட சிங்களக் கடும்போக்காளர்களான இனவெறியர் எதிர்த்து நின்றமையும், இவ்வாறான ஒரு முரண் நிலையில் மஹிந்த அவர்கள் கடும் போக்காளர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி அவர்களின் விருப்பிற்கு இசைவாக தனது தமிழர் விரோத ஆட்சியை நடத்திச் சென்றார்.
சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் விருப்பிற்கு மாறாக மஹிந்தவாகவிருந்தாலுஞ் சரி அல்லது வேறெரெவராகவிருந்தாலுஞ் சரி ஆட்சியைக் கொண்டு செல்லமாட்டார்கள் என்பதே நிஜமானதாகும்.
மைத்திரி அவர்கள் ஜனாதிபதியான தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பார் அவருக்கு வாக்களிக்கும்படி வடக்கு-கிழக்கு மக்களை வேண்டியமையைப் பலரும் எதிர்பார்த்தே இருந்திருப்பார்கள். மஹிந்த ஆட்சி தமிழர் விரோத ஆட்சி என்னுங் காரணத்தால், அவ்வாட்சியை அகற்றுவதற்கு இன்னுமொரு தமிழர் விரோத ஆட்சியைத் தான் தமிழரையும் வாக்களிக்கச் செய்வதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பில் நிறுவமுடியுமேயொழிய அக்கூட்டமைப்பால் மட்டுமல்ல எவராலுமே தமிழர் நலனைப் பேணக்கூடிய ஆட்சியை அமைப்பதற்கான பங்களிப்பைச் செய்யமுடியாது. இவ்விடத்தில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பில் நிறுவ முடியுமேயொழிய அக்கூட்டமைப்பால் மட்டுமல்ல எவராலுமே தமிழர் நலனைப் பேணக்கூடிய ஆட்சியை அமைப்பதற்கான பங்களிப்பைச் செய்யமுடியாது. இவ்விடத்தில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெரிதாக அலட்டிக்கொள்ளும் ‘தமிழ்த் தேசியத்தின்’ வங்குறோத்துத்தனம் அம்பலத்துக்கு வருகின்றது. அத்தோடு மஹிந்தவோடு இணைந்து ஆட்சி செய்த ‘மக்கள் விடுதலை முன்னணி’யினர் (ஜே.வி.பி) தம்முடைய ஆதரவு இல்லாமல் மஹிந்தாவால் ஆட்சியமைக்க முடியாதென ஆணவத்தோடு கருத்துவெளியிட்டமையும், அதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத ‘மஹிந்த’ ஜே.வி.பியினருக்கென ஆசனங்கள் சிலவற்றை ஒதுக்கி அவர்களோடு இணைந்து தேர்தலில் போட்டியிடுவதையும் தவிர்த்துத் தனித்து நின்றே போட்டியிட்டு ஆட்சியை அமைத்தார். இதன் காரணமாக ஜே.வி.பி யினருக்கு மஹிந்த மீது ஏற்பட்ட குரோதந்தான் அவரைக் கடந்த தேர்தலின் போது ‘வீட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும்’ என்னும் ஆக்ரோஷத்தை அவர்களுக்குள் தோற்றுவித்தது. இடதுசாரிக் கட்சியான ஜே.வி.பி மஹிந்தவுக்கு மாற்றீடாக மைத்திரி எனப் பிரச்சாரஞ் செய்து மைத்திரிக்கு ஆட்சி அமைப்பதற்குத் துணை நின்றதோடு, அவருடைய அரசாங்கத்தின் தேசிய நிறைவேற்றுச் சபையிலும் அங்கம் வகித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாரின் பதிலீடு அவர்களால் பிரச்சாரப்படுத்தபடும் தமிழ்த் தேசியத்தின் வங்குரோத்துத்தனத்தைப் பிரதிபலிப்பதைப் போலவே, மக்கள் விடுதலை முன்னணியினரின் பதிலீடு அவர்களால் பேசப்படும் இடதுசாரித்துவத்தின் வங்குரோத்துத்தனத்தைப் பிரதிபலிக்கின்றது.
இவ்விடத்தில் இலங்கைத் தீவையும், தமிழ் மக்களையும் ஒரு சேரப் பாதுகாக்க வேண்டுமென்றால் தேசத்தில் நிலைகொண்டுள்ள இடதுசாரித்துவத்தின் வங்குரோத்துத்தனம் உடனடியாக அகற்றப்படவேண்டுமெனவும், தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழ்த் தேசியத்தின் அதே வங்குரோத்துத்தனம் உடனடியாக அகற்றப்படவேண்டுமெனவும் கருத்துக் கூறுவதே பொருத்தமான ஒன்றாகவிருக்கும்.
எனினும் எதிர்வரும் தேர்தலில் மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவாராகவிருந்தால் தமிழ் மக்கள் மீண்டும் தற்போதைய மைத்திரியின் ஆட்சியில் அடக்கியொடுக்கப்படுவதைவிட அதிகளவு வீச்சோடு அடக்கியொடுக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. இறுதியாக இடம்பெற்ற தேர்தலின்போது தமிழ் மக்களைக் கூட்டமைப்பார் மைத்திரிக்கு வாக்களிக்கும்படி கோரியமையும், அவர்களின் கோரிக்கைக்கமைவாகத் தமிழ் மக்கள் அவருக்கே வாக்களித்தமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாரின் மீது மஹிந்தவுக்கு ஏற்பட்ட சீற்றத்தைவிடத் தமிழ் மக்கள் மீதே அவருக்கு அதிகளவு சீற்றத்தையேற்படுத்தியிருக்கும் நாட்டில் உள்ள இடதுசாரியினருக்குத் தமது வங்குரோத்துத்தனங்களிருந்து தப்பித்துக்கொள்வதற்கு அவ்வப்போது விதம் விதமான உபாயங்கள் உதயமாவது போல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாருக்கும் தமது வங்குரோத்துத் தனங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு அவ்வப்போது விதம் விதமான உபாயங்கள் உதயமாகிக்கொண்டிருக்கத்தான் செய்கின்றன.
எது எப்படியிருந்தபோதும் எதிர்வரும் தேர்தலில் மஹிந்தவைப் பிரதமர் ஆக்குவது தமிழருக்கு மிகவும் பாதகமாகவே முடியும். கடந்த தேர்தலின்போது மைத்திரிக்குத் தமிழ் மக்கள் வாக்களித்தமையையிட்டு அவர்கள் மீது மிகுந்த சீற்றமடைந்திருக்கும் மஹிந்த அவர்கள் மீண்டும் ஆளுங்கட்டில் ஏறினால், பழிவாங்கும் இயல்பைத் தன்னகத்தே அதிகளவில் கொண்டிருக்கும் மஹிந்த அவர்கள் தமிழர் மீதான அடக்கு முறைகளையும், புறக்கணிப்புக்களையும் எதேச்சாதிகாரங்களையும் நிச்சயமாக அதிகளவில் கட்டவிழ்த்து விடுவார் என்பதே நிதர்சனமாகும். எனவே எதிர்வரும் தேர்தலில் மஹிந்தவைப் பிரதமராக்குவதற்குத் தமிழ் மக்கள் முன்வருவது விவேகமல்ல. அதே நேரம் யாரைப் பிரதமராக்க வேண்டும் என்னும் விடயத்திலும் வங்குரோத்துத் தமிழ் தேசியத்தினதும் குரலைக் குருட்டாம் போக்கில் பின்பற்றுவதும் விவேகமான ஒன்றல்ல.

எனவே தமிழ் மக்கள் சுய சிந்தனையின் பாற்பட்டுத் தம்முடைய அரசியல் தெரிவை மேற்கொள்ள முன்வருவதே விவேகமானதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாரோ அல்லது ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியோ அல்லது ‘கஜேந்திரகுமார் பொன்னம்பலம்’ தலைமையிலான அணியோ அல்லது ஏனைய குழுக்களோ தமிழ் மக்களுக்குள் விதைக்கும் எண்ணங்களை அம்மக்கள் தமக்குள் கலந்தாலோசித்து ஆழப் பரிசீலித்தபின்பே எக்கட்சியை ஆதரிப்பதென்னும் முடிவுக்கு வரவேண்டும்.
எனினும், இதுவரையில் தமிழ் மக்கள் தமது சுயத்தை இழந்து குருட்டாம்போக்கில் தமது பிரதிநிதிகள் என எண்ணப்பட்டுவரும் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்டு வருவதின் தொடர்ச்சியே இறுதியாக இடம்பெற்ற தேர்தலின்போதான மஹிந்தவை நிராகரித்தமையெனலாம்.
அதனால் அவரை நிராகரித்தமை தொடர்பான அவரது கடுஞ் சீற்றம் எதிர்வரும் தேர்தலில் அவர் பிரதமராக்கப்பட்டால் தமிழ் மக்கள் மீதான அவருடைய எதிர்ப்பாய்ச்சல் மிக அதிகளவில் இடம்பெறும் என்பதற்கு ஏதுநிலையுண்டு. எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் மஹிந்தவை நிராகரித்தே தமது தீர்ப்பை வழங்குவது தான் தற்போதைய அரசியல் கள அமைவில் பொருத்தமான ஒன்றாகவிருக்கும்.

-வீரப்பதி விநோதன்-

SHARE