மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரால் நடத்தப்பட்டு வரும் பாதயாத்திரை இன்று முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

248

mahinda-suporters

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரால் நடத்தப்பட்டு வரும் பாதயாத்திரை இன்று முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

பல்வேறு தடைகளையும் தாண்டி கொழும்பு நோக்கி வரும் பாதயாத்திரையில் பொது எதிரணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்று வருகின்றனர்.

கடந்த 28ம் திகதி பாதயாத்திரையை கண்டியில் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் கண்டி மாநகர எல்லைக்குள் பாதயாத்திரையை ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்தமையினால் பேராதனை சந்தியிலிருந்து பாதயாத்திரையினை பொது எதிரணியினர் ஆரம்பித்திருந்தனர்.

இதேபோல் மாவனெல்லை நகர் வழியாக பாதயாத்திரை செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

அதனையடுத்து பேராதனை சந்தியிலிருந்து மாவனெல்லை எல்லைவரை வந்த பாதயாத்திரை கனேதென்ன பகுதியில் நிறைவுக்கு வந்தது.

மறுநாள் 29ம் திகதி மாவனெல்லை நகர் எல்லையைத் தாண்டி உந்துவங்கந்த பகுதியிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை நெலும்தெனியவை வந்தடைந்தது.

இதன்போதும் கேகாலை நகர்வழியாக பேரணி செல்வதற்கு தடைவிதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியிருந்த போதும் அதற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை நெலும்தெனியவிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை நிட்டம்புவ வரை வந்திருந்தது.

நேற்று நிட்டம்புவவிலிருந்து கிரிபத்கொடையை வந்தடைந்த பாதயாத்திரை இன்று கொழும்புக்குள் வரவிருக்கின்றது.

பொது எதிரணியினரின் பாதயாத்திரை பேலியகொடை வழியாக செல்வதற்கும் தடை விதிக்குமாறு பொலிஸார் கோரியிருந்த போதிலும், அந்தக் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்திருக்கின்றது.

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு இவ்வாறான தடைகளை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

உண்மையிலேயே நாட்டில் அரசியல் கட்சியொன்று ஜனநாயக ரீதியில் எத்தகைய போராட்டங்களை நடத்துவதற்கும் உரிமை இருக்கின்றது.

அது பொது எதிரணியாக இருந்தால் என்ன, ஏனைய எந்தக் கட்சிகளாக இருந்தால் என்ன ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு அனுமதி வழங்கவேண்டியது அவசியமேயாகும்.

advertisement

பொது எதிரணியினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பாதயாத்திரையினை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர்.

கண்டியிலிருந்து ஆரம்பித்து கொழும்பு வரை பாதயாத்திரையாக வந்து எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்திருந்த போதிலும், பாதயாத்திரையை தடை செய்வதற்கு பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக பொது எதிரணியின் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பொது எதிரணி பாதயாத்திரையினை ஆரம்பித்த தினத்தில் கண்டியில் ஐக்கிய தேசியக்கட்சி புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தது.

இதே போல் மறுநாள் மாவனெல்லை நகரிலும் இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது.

இதனால் தான் இரு கட்சியினருக்குமிடையில் முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் பொலிஸார் நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்து அதற்கான தடை உத்தரவுகளை வாங்கியிருந்தனர்.

இதேபோல் கேகாலை, வரக்காப்பொல, பேலியகொடை ஆகிய நீதிமன்றங்களிலும் பாதயாத்திரைக்கான தடைகோரி பொலிஸார் விண்ணப்பங்கள் செய்திருந்த போதிலும் அவை நிராகரிக்கப்பட்டிருந்தன.

கொழும்பில் ஹைட்பார்க் மைதானத்தில் எதிர்ப்புக்கூட்டத்தினை நடத்துவதற்கு பொது எதிரணியினர் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கான முற்பணமும் செலுத்தப்பட்டிருந்ததாகவும் ஆனால் திடீரென அங்கு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றமையினால் கூட்டத்தினை நடத்த முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொது எதிரணித் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இன்று கொழும்பை வந்தடையும் பாதயாத்திரையின் நிறைவில் எதிர்ப்புக்கூட்டத்தை நடத்துவதற்கு ஹைட்பார்க் மைதானம் தரப்படாவிடின் காலிமுகத்திடலில் கூட்டத்தை நடத்துவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்திருக்கின்றார்.

இத்தகைய செயற்பாடுகளிலிருந்து பொது எதிரணியின் பாதயாத்திரையை குழப்புவதற்கு அரசாங்கத் தரப்பு முயற்சித்ததோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பொது எதிரணி நடத்தும் ஆர்ப்பாட்டமானது சரியானதாகவோ அல்லது பிழையானதாகவோ இருக்கலாம்.

ஆனால், ஜனநாயக முறைப்படி தமது எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு அவர்களுக்கு உரித்துள்ளது.தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அங்கம் வகிக்கின்றன.

இவ்வாறு தேசிய அரசாங்கம் ஆட்சியை கொண்டு நடத்தும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே பொது எதிரணியாக செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு பொது எதிரணியாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சியினர் இருந்து வருகின்றனர்.

பாதயாத்திரைக்கு முன்னர் பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எம்.பி.க்களை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

பாதயாத்திரையில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்த எவரும் முனையக்கூடாது என்று ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

ஆனாலும் பொது எதிரணியிலுள்ள சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பாதயாத்திரையில் பங்கேற்றிருக்கின்றனர்.

இந்தப் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க அறிவித்திருக்கின்றார்.

முன்னரும் அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியிலுள்ள எம்.பி.க்கள் செயற்பட்ட போது இவ்வாறான அறிவிப்புக்கள் வெளியாகியிருந்தன.

ஆனாலும், எதிராக செயற்பட்ட எம்.பி.க்கள் எவருக்கும் எதிராக இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த மே தினத்தின் போது பொது எதிரணியினர் தனியாக பேரணியையும் கூட்டத்தையும் நடத்தியிருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக்கு எதிராக இந்த செயற்பாடு இடம்பெற்றிருந்தது.

மே தினக்கூட்டத்தில் பங்கேற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுதந்திரக்கட்சியின் தலைமைப்பீடம் பல தடவைகள் அறிவித்திருந்தது.

ஆனால் பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்கள் அனைவரும் இந்த மே தினக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

கடந்த காலங்களில் இவ்வாறு சுதந்திரக்கட்சியின் தலைமை எதிராக செயற்பட்ட எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமையினாலேயே அந்தத் தரப்பினரை சுதந்திரக்கட்சியினரின் தலைமை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

கட்சியின் தலைமை தமது எம்.பி.க்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இதனை விடுத்து, அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை தடுப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ அரசாங்கமானது முயல்வதானது மக்கள் மத்தியில் பெரும் சந்தேக உணர்வுகளை ஏற்படுத்துவதாகவே அமையும்.பொது எதிரணியினர் பேரணியினை நடத்தும்போது அதனை அனுமதிக்கவேண்டும்.

தடைகளை ஏற்படுத்தி பாதயாத்திரைக்கு எதிராக அரசாங்கம் செயற்படுமானால் அது பொது எதிரணியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஆத்திர உணர்வை ஏற்படுத்தும்.

அத்துடன் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முனைகின்றது என்ற குற்றச்சாட்டு எழுவதற்கும் வழிவகுக்கும்.

முன்னைய அரசாங்க காலத்தில் ஜனநாயக ரீதியிலான போராட்டங் களுக்கு தடைகள் விதிக்கப்பட்டன.

காணாமல் போனோரது உறவினர்களது போராட்டமாக இருக்கலாம். அல்லது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டங்களாக இருக்கலாம். அனைத்துக்கும் முன்னைய அரசாங்கமானது தடைகளை விதித்ததுடன் கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியிருந்தது.

ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு தடைகள் விதிக்கப்படக்கூடாது.

பொது எதிரணியினால் மேற்கொள்ளப்படும் பாதயாத்திரைக்கு தடைகளைப் போடாது விட்டிருந்தால் யாத்திரை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ளவாறான எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது.

ஆனால் தடைகளுக்கான முயற்சிகள் எடுக்கப்படும்போது அது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி விடும்.

அதனால் தவறான போராட்டங்களும் நியாயப்படுத்தப்பட்டு விடும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்வது நல்லது.

SHARE