மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி இன்றோடு (ஜனவரி 08, 2016) ஓராண்டு பூர்த்தியாகின்றது.
போர் வெற்றிக் கோசமும், பௌத்த சிங்கள கடும்போக்குவாதமும் ஆட்சியதிகாரத்தை தொடர்ந்தும் தக்க வைக்க உதவும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பு நம்பிக் கொண்டிருந்த போது, ஜனநாயகமும்- வாழ்தலுக்கான சூழலும் அவசியம் என்று புரிந்து கொண்டு நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து ஆட்சியை மீட்டெடுத்தனர். அதுதான், மைத்திரிபால சிறிசேனவை நாட்டின் புதிய ஜனாதிபதியாக்கியது.
மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சகாவான மைத்திரிபால சிறிசேன, அவருக்கு எதிராகவே ‘நல்லாட்சிக் கோசத்தினை’ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்வைத்த போது சிறு அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும், ஜனநாயகத்தை பகுதியளவிலாவது மீட்டெடுக்க கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பங்களை வீணாடிக்கக் கூடாது என்கிற நிலை, இன- மத பேதங்கள், பெரும் அரசியல் நிலைப்பாடுகள் தவிர்த்து ஒரு புள்ளியில் இணைய வைத்தது. அதுதான், நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் வைத்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பகுதியளவில் ஆட்சியமைத்து ஒரு வருடமும், பாராளுமன்ற பெரும்பான்மையோடு முழுமையான ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி சில மாதங்களும் ஆகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக வெளி முற்றிலுமாக அச்சுறுத்தலுக்குள் இருந்தது. அதனை மாற்றுவதற்கான வெளிப்பாட்டை புதிய அரசாங்கம் குறிப்பிட்டளவில் செய்திருக்கின்றது. அதன்போக்கிலான மாற்றங்கள் சிலவற்றை நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பெற்றுள்ளனர். அதுபோலவே, நீதிமன்ற அதிகாரங்களின் மீது தலையீடு செய்யும் முறைமை குறிப்பிட்டளவில் நீக்கப்பட்டிருக்கின்றது. அவை வரவேற்கப்பட வேண்டியவைகளில் முக்கியமானவை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கும் முன்னால், பாராளுமன்றமும்- அதன் அதிகாரமும் ஒன்றுமேயில்லாத நிலையொன்று கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்றத்துக்கான நிலையான அதிகார சூழலினை உருவாக்குவதில் தற்போதைய ஜனாதிபதியும், புதிய அரசாங்கமும் குறிப்பிட்டளவான அர்ப்பணிப்பை வெளியிப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதன்போக்கில், 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதுதான், எதிர்வரும் நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தின் பெரும் அதிகாரங்களை இன்னமும் நீக்கம் செய்து பாராளுமன்றத்தை அதிகாரமுள்ள அவையாக மாற்றுவதற்கான முனைப்புக்களைச் செய்யப்போகும், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தினையும் செய்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்தோடு நாட்டில் கடும்போக்கு வாதம் தோற்கடிக்கப்பட்டது மாதிரியான தோற்றப்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சி வெளிப்படுத்தியிருந்தாலும், அது மாயத்தோற்றமாக இருப்பது வருந்தமளிக்கும் விடயம்.
தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும், இறுதிப் போரின் பின்னரான அவர்களின் மீள் எழுச்சி, மீள் குடியேற்றம் தொடர்பிலும் அவ்வளவு அக்கறை வெளிப்படுத்தப்படவில்லை. மாறாக, காலம் கடத்தும் நாடகமொன்று தொடர்ந்தும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இறுதி மோதல்களின் போது மோதல்களில் ஈடுபட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான நீதியான விசாரணை மற்றும் கடந்த காலங்களில் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்களை மீட்டெடுப்பதற்கான விடயங்களில் புதிய அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.
மாறாக, சர்வதேச பொறிகளிலிருந்து தப்புதவதற்கான முனைப்புக்களின் போக்கிலேயே விடயங்களை அணுகி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை தொடர்ந்தும் அலைக்கழிக்கின்றது. இது, இதயசுத்தியற்ற நடவடிக்கை. அதனை, நல்லாட்சியின் பெயரினால் புதிய அரசாங்கமும் செய்து கொண்டிருக்கின்றது.
இலங்கையில் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் என்பது இன்னமும் படுகுழியில் காணப்படுகின்ற நிலையில், அதனை மாற்றுவதற்கான முனைப்புக்களை புதிய அரசாங்கம் மேற்கொள்வதற்கு பதிலாக, மேல் மட்டத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றது மாதிரியான குற்றச்சாட்டுக்களும் எழாமல் இல்லை.
இந்த வருடத்துக்கான முன்வைக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டத்திலும் அப்படியானதொரு நிலை இருப்பதாக எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இப்படியான நிலையிலேயே, நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தி அனுஷ்டிக்கப்பட வேண்டியிருக்கின்றது.
சுதந்திர இலங்கையில் வீச்சம் பெற்று அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் பிரச்சினையாக நீளும் தேசிய அரசியல் பிரச்சினையான இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் சந்தர்ப்பத்தை நல்லாட்சி அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதுவும் இப்போதுள்ள பெரும் கேள்வி.
ஏனெனில், இனமுரண்பாடுகள் என்பது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை மாத்திரம் அல்ல. அது, நாட்டின் அனைத்து தரப்பினரையும் அரசியல் சிக்கலுக்குள் மாட்டி வைத்துக் கொண்டிருக்கும் பிரச்சினையாகும். அதற்கான தீர்வு, வாக்கு அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி பெறப்பட வேண்டியது. அதுதான், சுதந்திர இலங்கையில் உண்மையான நல்லாட்சியை ஏற்படுத்தும். அதுதான், நல்லாட்சி அரசாங்கத்தினை உண்மையாகவே மக்களின் மனங்களில் உச்சத்தில் வைத்துக் கொள்ள உதவும். மாறாக, போலியான அரசியல் விடயங்கள் அல்ல!