மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேசத்தின் குற்றச்சாட்டை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் விரோதத்திற்கு நாம் உள்ளாக நேரிடும். அதுமாத்திரமின்றி உண்மையைக் கண்டறியாவிட்டால் மக்களும் எம்மை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்து விடுவர். –
இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமாதானத்துக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- உண்மையைக் கண்டறியவே உள்ளகப் பொறிமுறையை ஏற்படுத்தவுள்ளோம். தவறுகள் வெளிப்பட வேண்டும். வடக்கு மட்டுமன்றி, வெலிக்கடை, ரதுபஸ்வெலவிலும் படுகொலைகள் நடந்துள்ளன.
அவற்றை யார் செய்தது எனக் கண்டறிய வேண்டும். ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களே ஆணையை வழங்கினர். அவரின் தலைமையில் நாம் ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்தினோம். இதேபோல உண்மையைக் கண்டறியவும் தயாராகவுள்ளோம். தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்வது எமது கடமை. இதன்போது நாம் படையினரைக் காட்டிக் கொடுத்துச் செயற்பட மாட்டோம்.
அதற்கான அவசியமும் எமக்குக் கிடையாது. நாம் எவரையும் வேட்டையாடுபவர்களல்லர். எனினும், மஹிந்தவின் காலத்தில் சரத் பொன்சேகா வேட்டையாடப்பட்டார். ஜனாதிபதி வேட்பாளராக அவர் நின்றதே அவர் செய்த குற்றம். அதற்குப் பெரும் தண்டனையை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. நாம் மஹிந்த போன்று எவரையும் பழிவாங்கப்போவதில்லை. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.
நாம் முன்னெடுத்த நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. எங்கள் மீது சர்வதேசம் நம்பிக்கை கொண்டுள்ளது. எனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேசத்தின் குற்றச்சாட்டை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் விரோதத்திற்கு நாம் உள்ளாக நேரிடும். அதுமாத்திரமின்றி உண்மையைக் கண்டறியாவிட்டால் மக்களும் எம்மை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்து விடுவர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையினாலேயே சர்வதேசத்தின் எதிர்ப்பை இலங்கை சந்திக்க நேரிட்டது. மஹிந்த ராஜபக்ஷ தனக்காக மாட்டிக் கொண்ட தூக்கு கயிறிலிருந்து நாமே அவரைக் காப்பாற்றியுள்ளோம் –