முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வழியையே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பின்பற்றுகின்றார் என புரவசி பலய அமைப்பின் உறுப்பினரும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவருமான கெமுனு விஜேரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
முன்னாள் ஜனாதிபதி செயற்பட்ட நிலைக்கு தற்போதைய ஜனாதிபதியும் தள்ளப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய உரை நாட்டை பின்நோக்கி நகர்த்தும் வகையிலானது. அரசியல் நோக்கில் அந்த உரையை ஆற்றினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் யாருடைய கைப்பாவையாகவும் செயற்பட்டதில்லை. ஊசி அளவிற்கேனும் நன்மைகளை பெற்றுக்கொண்டதில்லை.
நாம் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதாக அமைச்சர் டிலான் குற்றம் சுமத்துகின்றார். அந்த குற்றச்சாட்டுக்களை யாரேனும் நிரூபித்தால் நான் பதவி விலகுவேன். இந்தக் குற்றச்சாட்டை டிலான் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
நாம் மஹிந்த ராஜபக்சவிற்கே அஞ்சியதில்லை, டிலான் பெரேராவிற்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. நாம் பயந்திருந்தால் இன்று மைத்திரி ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்க முடியாது.
ஜனாதிபதியின் கருத்தினால் நிதி மோசடி விசாரணைப் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் அச்சமடைந்து விசாரணைகளை பாதித்துள்ளது.
ஜனாதிபதி தனது கூற்றை திருத்திக் கொள்ளத் தவறினால் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கச் செய்த போராட்டத்தை, மைத்திரியை தோற்கடிக்கவும் செய்ய நேரிடும் என கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.