மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதையே நாங்கள் விரும்புகின்றோம். எந்த முறைமையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் எமக்கு வெற்றி நிச்சயமாகும். ஆனால் பழைய முறைமையே சிறந்தது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருக்கின்றார்.
புதிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையானது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. அந்தக்குழப்பங்கள் மாகாணசபைத் தேர்தலிலும் இடம்பெறக்கூடாது.
தற்போது சிறுபான்மை கட்சிகளும் புதிய முறைமையை எதிர்த்துள்ளமையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம் 23 அல்லது ஜனவரி 5ஆம் திகதி நடத்து வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை பாராளு மன்றத்தில் கூடிய கட்சித் தலைவர் கூட்டத் தில் தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் தேர்தலை எந்த முறை யில் நடத்துவது என்பது குறித்து ஆராய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கெஹெலியரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர் பில் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையிலாவது விரைவில் நடத்தவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். தேர்தலை விரைவில் நடத்துங்கள் என்றே நாங்கள் கோரி வருகின்றோம். இந்தநிலையில் மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதே சிறந்தது என்று நாங்கள் நம்புகின்றோம்.
காரணம் புதிய முறைமையில் நடத்தப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் பல குழப்பங்களை ஏற்படுத்திவிட்டன. அந்த குழப்பங்கள் மாகாண சபைத் தேர்தலிலும் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது. அதுமட்டுமன்றி புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்திற்கு ஆதரவளித்த சிறுபான்மை கட்சிகள் இன்று புதிய முறைமை வேண்டாம் என்றும் பழைய முறைமையே சிறந்தது என்றும் கூறிவருகின்றன.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் பாராளுமன்றத்தில் புதிய முறைமையின் பாதகநிலைமை குறித்து விரிவாக உரையாற்றியிருந்தார். எனவே பழைய முறைமையிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்துவதே சரியானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
எப்படியாவது மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும். ஏற்கனவே சில மாகாணசபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளன. அந்த நிலைமை நீடிக்கக்கூடாது. விரைவில் பழையமுறைமையில் தேர்தலை நடத்து வதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் முன்வைக்கின்ற கரிசனைகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.