மாங்குளம், கற்குவாரி கிராமத்திலிருந்து, ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி காணாமற்போன 2 சிறுவர்களையும் நுவரெலியாவில் வைத்து கடந்த 3ஆம் திகதி மீட்டதாக, மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மாங்குளம் மகா வித்தியாலயத்தில், தரம் 8இல் கல்வி பயிலும் சிவானந்தன் இராமகிருஷ்ணன் (வயது 16), கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகுமார் (வயது 15) ஆகிய இரு சிறுவர்களும், மாங்குளத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவருவதாகக்கூறிச் சென்றுள்ளனர்.
அவ்வாறு சென்றவர்கள் வீடு திரும்பாததையடுத்து, அவர்களைத் தேடிய பெற்றோர் அதன் பின்னர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டுக்கிணங்க தேடுதல் நடத்திய பொலிஸார், எட்டு நாட்களின் பின்னர் நுவரலியாவில் வைத்து சிறுவர்களை மீட்டனர். சிறுவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பெற்றோரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இவ்விரு சிறுவர்களும், மலையகத்தைப் பார்வையிடுவதற்காகவே அங்கு சென்றதாக, விசாரணைகளின் போது பொலிஸாரிடம் தெரிவித்ததாக, பொலிஸார் கூறினர்.