யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிசார் தலையிட வேண்டாம் என பல்கலைகழக விரிவுரையாளர்கள் கோரியதால் தாம் விசாரணைகளை மேற்கொள்ள வில்லை என கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்ஜீவ ஜெயக்கொடி தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை காலை சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா பல்கலைகழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கும் போதே மேற்கண்டவாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.பல்கலை கழக மாணவர்களுக்கு இடையில் நேற்றைய தினமும் மோதல் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை.
நேற்றைய மோதலின் தொடர்ச்சியாக இன்றைய தினமும் மாணவர்கள் தங்களுக்கு மோதிக்கொண்டு உள்ளார்கள். முதலில் பல்கலை கழக வளாகத்தினுள் மோதிக்கொண்டவர்கள் பின்னர் வீதியில் வந்தும் மோதிக்கொண்டார்கள்.
மாணவர்களுக்கு இடையிலான மோதல் காரணமாக வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.
அது தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து உடனே நாம் அப்பகுதிக்கு விரைந்தோம். வீதியில் மோதலில் ஈடுபட்டு இருந்த மாணவர்கள் எம்மை கண்டதும் பல்கலைகழக வளாகத்தினுள் ஓடிவிட்டனர்.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் நாம் அப்பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டு இருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த பல்கலைகழக விரிவுரையாளர்கள் நால்வர் உங்களை யார் கூப்பிட்டது ? ஏன் வந்தீர்கள் ? என கேட்டனர். அதனால் நாம் அவ்விடத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளாது திரும்பி விட்டோம் என தெரிவித்தார்.
அத்துடன் மாணவர்களின் மோதல் சம்பவத்தால் பாரதூரமான சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்று இருந்தால் அதனை தடுக்க போலீசார் தவறி விட்டனர் என பொலிசார் மீதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்தார்.