நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா அவருடைய தந்தை சாரங்கபாணியுடன் ஊட்டியில் மெட்ரிக் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்கிற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் பிரிதிவிராஜ் என்பவர் 2012ம் ஆண்டு ஊட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தான் மெட்ரிக் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து விட்டு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற போது தனக்கு வழங்கிய பட்டம் போலி என கூறி தன்னை நிராகரித்தாகவும்,
இது தொடர்பாக சென்னைக்கு சென்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளை சந்தித்து கேட்ட போது அவர்களும் போலி என கூறியதால் என்னை போன்ற மாணவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக இருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்து இருந்தார்.
இது தொடர்பாக கல்லூரி டீன் சாரங்கபாணி, நிர்வாக இயக்குநர் ஷாலினி, இயக்குநர் வந்தனா, பேராசிரியர்கள் அசோக்குமார், சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 2012ம் அக்டோபர் 15ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர்கள் வந்தனா மற்றும் அவரது தந்தை சாரங்கபாணி ஒரு முறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராஜவேலு வருகிற 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கில் வந்தனா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் கல்வி நிறுவனத்தில் இருந்து ஆண்டு தோறும் பலர் தங்களது படிப்பை முடித்து நல்ல எதிர்காலம், வேலை வாய்ப்பு, குடும்பத்தை காப்பாற்றலாம் என்று எண்ணி கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால் கல்வி நிறுவன நிர்வாகிகள் போலியான கல்வி நிறுவனத்தை நிறுவி மாணவர்களின் எதிர்காலத்தையே வீணடித்துள்ளனர்.
மேலும் வழக்கில் இவர்களுக்கு தண்டனை கிடைத்தாலும் மாணவர்கள் தாங்கள் படித்து வாங்கிய பட்டம் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு யார் பதில் சொல்வது ? இதற்கும் சட்டம் தான் பதில் சொல்ல வேண்டும்.