வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் யா/ அல்லைப்பிட்டி றோ.க.வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்களுக்கும், யா/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 21 மாணவர்களுக்குமாக மொத்தம் 27 மாணவர்களுக்கு ரூபா நான்கு இலட்சத்து ஐந்நூறு பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும், யா/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம் பெறுமதியான கதிரைகளும் கொள்வனவு செய்து வழங்கி வைத்தார்.
மேற்படி பாடசாலைச் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக நேரில் பாடசாலைகளுக்குச் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் இரண்டு பாடசாலைகளுக்குமான துவிச்சக்கர வண்டிகள் மற்றும் யா/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கான கதிரைகள் என்பனவற்றைக் கொள்வனவு செய்து, 18.10.2018 அன்று வழங்கி வைத்தார்.
பாடசாலையின் உப அதிபர் திரு. சேவியர் சுவைணஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேலணை பிரதேசசபை உறுப்பினர்களான செ.பார்த்தீபன், சி. அசோக்குமார் திரு. பிரான்சிஸ், யா/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய அதிபர் திரு. கோ. பத்மநாதன், யா/ அல்லைப்பிட்டி றோ.க.வித்தியாலய அதிபர் திரு. என்.பத்மநாதன் மற்றும் இரண்டு பாடசாலைகளினதும் அபிவிருத்திச் சங்க செயலாளர்கள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.