மாணவர் போராட்டத்தின் எதிரொலியே குமார் குணரட்னம் கைது – துமிந்த நாகமுவ:-

309

மாணவர் போராட்டத்தின் எதிரொலியே குமார் குணரட்னம் கைதாக வெளிப்பட்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னம் கடந்த சில மாதங்களாக இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் உரிமைகளை உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் மாணவர்கள் விவகாரத்தில் மோசமாக நடந்து கொள்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் போராட்டங்களை தடுத்து மக்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் குமார் குணரட்னத்தை கைது செய்து நாடு கடத்தியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்றுக்கொண்ட பலர் நாடு திரும்பியதாகவும் அவ்வாறு நாடு திரும்பியவர்களில் ஒருவராகவே குமார் குணரட்னத்தையும் கருத வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தின் பாதையில் பயணித்து வருவதாகவும், அரசாங்கம் நீண்ட காலம் பயணிக்கக் கூடிய சாத்தியம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE