மாணவிக்கு நடந்த கொடூரம் சொல்லும் செய்தி என்ன?

317

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மூன்று மைல் தூரத்திற்கு அப்பால் இருக்கின்ற பாடசாலைக்குச் செல்வதற்காக பற்றைகளையும் வெளிகளையும் பாழடைந்த வீடுகளையும் கடந்து செல்கின்ற துயரம் சாதாரணமானதன்று. காலை வேளையில் சீருடையோடு பாடசாலைக்குச் சென்ற மாணவிக்கு நடந்தது என்ன? என்பதை அறிவதற்கு இருபத்துநான்கு மணிநேரம் கடக்க வேண்டியதாயிற்று என்றால்,அந்த மாணவி வாழ்ந்த சூழல், பயணித்த பாதை எவ்வாறானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிற தல்லவா?

இது தவிர, பின்தங்கிய பிரதேசங்கள் என்று வகைமைப்படுத்தி பின்தங்கிய பிரதேசங்களை மேய்ப்பாரும் இல்லை. பார்ப்பாரும் இல்லை என்ற அவலநிலைக்கு தள்ளிவிட்டு; வசதியான இடங்களில் இருந்து கொண்டு அரசியல் நடத்துகின்ற அநியாயங்கள் சொல்லிமாளா! தனது பிள்ளையைக் காணவில்லை என்று ஊர் காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, பொலிஸார் அந்த தாய்க்குச் சொல்லிய காரணம் எங்கள் இனம் தொடர்பில் பொலிஸார் என்ன கணிப்போடு உள்ளனர் என்பது புரிகிறதா?

முறைப்பாட்டைப் பொலிஸார் பதிவு செய்யவில்லை; காணாமல்போன பிள்ளையை தேடுவதற்கு வரவில்லை என்றால்,இது தொடர்பில் எந்த எம்பியிடம் முறையிட முடியும் அல்லது எந்த அரசியல் தலைமையிடம் சொல்ல முடியும். இதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் உண்டா?

ஓ! அந்தோ! கொடூரம். புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் கூட்டு வன்புணர்வால் உயிரிழந்தார் என்றால்,எங்கள் இளம் சமூகம்; இளைஞர்கள் எந்த மனநிலையில் உள்ளனர். இவர்களை வழிப்படுத்த நெறிப்படுத்த எங்கள் அரசியல் தலைமைகள் தீட்டிய-செயற்படுத்திய திட்டங்கள் என்ன?

எதுவுமே இல்லை எனும் போது, இழந்து இழந்து அழுவதுதான் எங்கள் தலைவிதி என்றாகிவிடும். தலைவிதியை மாற்ற வேண்டும் என மக்கள் நினைக்காதவரை துன்பம் தொடர் கதையாகத்தான் போகிறது

SHARE