மாணவியை கற்பழித்து கொன்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

178

ஜேர்மனியில் மாணவி ஒருவரை கற்பழித்து கொலை செய்த தம்பதி இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு ஜேர்மனியில் உள்ள Dessau என்ற நகரில் சீனாவை சேர்ந்த Li Yangjie(25) என்பவர் கட்டடக்கலை துறையில் படித்து வந்துள்ளார்.

கல்லூரி செல்வதற்கு முன்னர் அதிகாலை நேரத்தில் மாணவி ஜாக்கிங் செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இதுபோன்று ஒருநாள் ஜாக்கிங் சென்றபோது Xenia I என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரின் நட்பும் நெருக்கமானதை தொடர்ந்து தனது வீட்டிற்கு வருமாறு மாணவியை அப்பெண் அழைத்துள்ளார்.

பெண்ணின் அழைப்பை ஏற்ற மாணவி கடந்தாண்டு மே மாதம் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, வீட்டில் பெண்ணின் கணவரான Sebastian F என்பவர் இருந்துள்ளார். மாணவியுடன் இருவரும் கலந்துரையாடியபோது தம்பதியின் நடவடிக்கைகள் மாணவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

‘விடுதிக்கு செல்கிறேன்’ எனக் கூறிவிட்டு மாணவி புறப்பட்டபோது தம்பதி இருவரும் மாணவியை தடுத்து விட்டு வீட்டை உள்பக்கமாக பூட்டியுள்ளனர்.

இருவரின் நடவடிக்கையை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தபோது, கணவர் மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரின் பலத்தை எதிர்க்கொள்ள முடியாமல் மாணவி திணறியபோது, கணவர் அந்த மாணவியை கொடூரமாக கற்பழித்துள்ளார்.

பின்னர், அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் மாணவி உயிரிழந்ததும் அவரது சடலத்தை இருவரும் வெளியே கொண்டு சென்று மறைத்துள்ளனர்.

ஜாக்கிங் சென்ற மாணவி விடுதிக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது தோழிகள் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் இரண்டு தினங்களுக்கு பின்னர் மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு தம்பதி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பல மாதங்களாக நடந்து வந்த விசாரணையில், இருவரின் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கின் இறுதி வாதம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, மாணவியை கற்பழித்து கொலை செய்த கணவருக்கு 15 ஆண்டுகளும், இதற்கு உடந்தையாக இருந்த மனைவிக்கு 5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனையை நீதிபதி விதித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு குற்றவாளிகள் இருவரும் 60,000 யூரோ இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE