மாறாத வடுவையும், ஆறாத துயரத்தையும் தந்துள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை!

349

mullivaikkal

மாறாத வடுவையும், ஆறாத துயரத்தையும் முள்ளிவாய்க்கால் படுகொலை தந்துள்ளது என வன்னி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

முள்ளியவாய்கால் நினைவு தினம் தொடர்’பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது,

கொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் உயிருடன் இருக்கும் அவர்களது இனிய உறவுகளுக்கு அதுவே துயரத்தின் ஊற்று. கொல்லப்பட்டவர்கள் பற்றிய துன்பச் சுமையையும் அவ்வாறு கொல்லப்பட்டோர்கள் விட்டுச் சென்றுள்ள அவர்களுக்குரிய குடும்பச் சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலையில் அவர்களது இனிய உறவினர்களின் இடர்கள் உள்ளன.

சுமாராக 1,50,000க்கும் மேல் பெரும் தொகையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அது சமூக கட்டமைப்பில் பாரிய குலைவையும் பெரும் இடைவெளியையும் ஏற்படுத்தியுள்ளது.

download eezham-genocide02 Tamil-04

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இப்பெருந்தொகையான மக்களின் பெரும்பாலானோர் சிறுவர்களும், குழந்தைகளும், பெண்களுமாவர்.

பெண்களின் கையிலேயே பிள்ளைகளின் பாதுகாப்பு இருப்பது இயல்பு. ஆனால் பிள்ளைகள் பதுங்கு குழிகளுள் ஆகக்கூடியது 20 நிமிடத்திற்கு மேல் இருக்கமாட்டார்கள்.

அதுவும் சிறிய பதுங்கு குழிகளுள் அதன் கொள்ளளவை விடவும் அதிகமானோர் பதுங்குவதால் கரியமில வாயு வேகமாக அப்பதுங்கு குழிகளை நிரப்ப சிறுவர்கள் அதனால் இலகுவில் பாதிப்புற்று தலைவலிக்கு உள்ளாகி பதுங்கு குழிகளைவிட்டு சிறிது நேரத்திலேயே வெளியேறுவர்.

அப்போது பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக பெண்கள் கூடவே வெளியேறிவிடுவர். வெளியேறிய பிள்ளைகள் அங்கிங்காய் ஓடும் போது அவர்கள் எறிகணை தாக்குதலுக்கு இலக்காகுவர்.

அப்போது குறிப்பாக பெண்கள் பிள்ளைகளை நோக்கி ஓடும் போது பிள்ளைகளும் பெண்களும் எறிகணை வீச்சிற்கு சிக்குண்டு மாள்வது இயல்பாகவே நிகழ்ந்தன.

இதனால் பெண்களும், சிறுவர்களுமே அதிகம் மாண்டனர் என்பது உண்மை.ஆசியாவிலேயே கருவில் இருந்து கல்லறைவரை ஒருவரின் விபரக் கோவையை பெரிதும் பதிவுசெய்து வைத்திருக்கும் நாடு இலங்கை என்ற பெருமை பேசப்படுவதுண்டு.

அப்படியென்றால் அப்பதிவேடுகளின் துணைகொண்டு மேற்படி கொல்லப்பட்ட அனைவரின் விபரங்களை அரசினால் இலகுவில் திரட்டி வெளியிட முடியும். ஆனால் அதற்கு இந்த அரசு தயாரில்லை என்பது வேதனைக்குரியது.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் முள்ளிவாய்க்கால் பற்றிய அனைத்து அநீதிகளும் களையப்படும் என்றும் அவ்வாறு மக்களைக் கொன்றவர்கள் மீது விசாரணை நடத்தி கண்டிக்கப்படுவார்கள் என்றும் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்தது இந்த அரசாங்கம்.

ஆனால் அவ்வாறு பதவிக்கு வந்ததும் அதனால் நன்மை அடைந்தது தமிழ் மக்களை பாதித்த தரப்பினரே தவிர தமிழ் மக்கள் அல்ல.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் நடந்தது என்ன? அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படவில்லை.

அரசிடம் சரணடைந்தும்- அரசால் கைது செய்யப்பட்டும் இருந்தோரில் காணமல்போகச் செய்யப்பட்ட 17400 பேரில் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தைப்பொங்கல் தினத்தன்று அறிவித்துவிட்டார்.

போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை என்பது இராஜதந்திர சூழ்ச்சி வலைகளினால் மூடிக் கட்டப்பட்டுவிட்டது. அரசியல் தீர்வு பற்றிய விடயம் இலவு காத்த கிளியின் கதையாக காட்சியளிக்கிறது.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்பதற்குப் பதிலாக ஏற்கனவே விடுதலையாகியிருந்த முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படும் நிலையே இன்று காணப்படுகிறது.

மேற்படி ஒன்றரை வருட காலத்தில் மக்களிடம் இராணுவத்தால் 20 வருடங்களுக்கு முன் பறிக்கப்பட்டிருந்த குடியிருப்பு மற்றும் தோட்டக் காணிகளில் சிறிதளவு பகுதி அவர்களது வீடுகள், கிணறுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெறும் காணித்துண்டுகள் மட்டும் திருப்பி கையளிக்கப்பட்டதைத் தவிர ஒன்றரை ஆண்டுகளில் தமிழருக்கு வேறெதுவும் நிகழவில்லை.

இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் இயல்பாகவே அரசாங்கத்தின் மீது கோபம் எழுந்துள்ள சூழலில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின.

ஒரு குறைந்தபட்ச ஜனநாயக சூழலில் அத்தகைய எழுச்சிகள் ஏற்பட முடியும் என்று அரசு கணக்குப் போட்டுள்ளதால் அத்தகைய எழுச்சிகளைத் தடுப்பதற்கான எழுச்சி எதிர்ப்புத் தந்திரமாக பயங்கரவாத பூதத்தைக் காட்டி விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை கைதுசெய்யும் படலம் ஆரம்பமாகியுள்ளது.

அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய நிலையில் அதற்கு எதிராக எழக்கூடிய மக்கள் எழுச்சிகளை தடுப்பதற்கான பலிகடாக்களாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை கைது செய்கிறது. இது போலீஸ், புலனாய்வு அரசை பலப்படுத்தி மக்கள் போராட்டத்தை தடுப்பதற்கான ஒரு தந்திரமாகும்.

முள்ளிவாய்க்காலில் படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்கள் பற்றி அரசுக்கு எந்த கவலையும் கிடையாது. எந்தவித அனுதாபச் செய்தியையும் வெளியிடக்கூடிய அளவிற்கு சிங்கள மக்களின் மத்தியில் இருந்து நீதிமான்கள் யாரையும் காணமுடியவில்லை.

90,000 இளம் விதவைகள், அங்கவீனம் உற்றோர், பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், வாழ்வின் அனைத்து கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்ட நிலை, சமூக கட்டமைப்பு குலைந்து போயுள்ள நிலை, குடும்பத்திற்கு சோறு போடும் குடும்ப உழைப்பாளி கொல்லப்பட்ட நிலையென பேரழிவுக்கு உள்ளான தமிழ்ச் சமூகத்தில் பெரும் வெற்றிடங்கள் நிலவும் போது அரசாங்கத்தின் நடப்பாண்டு வரவு-செலவு திட்டத்தில் இதற்காக நிதிகள் ஒதுக்கப்படவில்லை.

முள்ளிவாய்க்கால் 2009, மே-18 அவலத்தை விடவும் அதன் விளைவாக பின்பு அதிகரித்துச் செல்லும் தொடர் துயரத்தின் அளவு மிகப் பெரியது.

எனவே இப்போதைய இந்த மனித அவலத்தை முள்ளிவாய்க்கால் 2009, மே-18 அவலத்தை விடவும் பெரிதானதென கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த வடுவையும், துயரத்தையும் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

வரலாற்றுச் சக்கரத்தில் இது சுழன்று பல புதிய புதிய பிறப்புக்களைக் கொண்டுவரும்.ஆனால் அதுவரை இந்த மக்களுக்கு ஆறுதல் கூற யாரும் இல்லை. மாறாக அநீதியை மூடி மறைக்கவே ஆயிரம் கரங்கள் உள்ளன.

ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஓர் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல ஒருநாள் தமக்கான உரிமையும்இ நீதியும் வென்றெடுக்கப்படும் என்ற ஆறுதலைத் தவிர மக்களுக்கு ஆறுதல் வேறெதுவும் இல்லை.

படுகொலைக்குள்ளான எமது இனிய உறவுகளுக்கு நெஞ்சார அஞ்சலி கூறுவதுடன் அவர்தம் இனிய உறவினர்களுக்கு ஆறுதலைக் கூறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் உள்ளோம் என்ற துயரை இத்துயர் தோய்ந்த நினைவுநாளில் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

SHARE