மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் தரமானது-அமைச்சர் எஸ்.பி

227
சர்ச்சைக்குரிய மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏனைய அரச பல்கலைக்கழகங்களை விடவும் உயர்ந்த இடத்தையே வகிப்பதாக தெரிவித்துள்ள  அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை விடவும் மாலம்பே பல்கலைக்கழக மாணவர்கள் உயர்ந்த தகுதியைக் கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
எனவே மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்குவதற்கான அனைத்து அதிகாரமும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு உள்ளதால் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவப் பட்டம் வழங்கும் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அமைச்சர் திஸாநாயக்க விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க,  சர்ச்சைக்குரிய மாலம்பே பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்தார்.
“மாலம்பே பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிப்பதற்கான மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்வேறு சட்டதிட்டங்களை வகுத்திருக்கிறது.  நேர்முகப் பரீட்சைகளில் மானியங்கள் ஆணைக்குழுவின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.  இந்த நிலையில் திருட்டுத்தனமான மருத்துவப் பல்கலைக்கழகம், விற்பனை நிலையம் எனப் பல்வேறு பெயர்களை சிலர் இதற்கு சூட்டுகின்றனர். எனினும் கொழும்பு, பேராதனை, களனி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகியவற்றில் மருத்துவப் பல்கலைகழகங்கள் காணப்படுகின்றன. இவற்றில் கற்கும் மாணவர்களில் நூற்றுக்கு 40 வீதமானவர்களை விடுத்து, 60 வீதமான மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மாவட்ட கோட்டா முறை அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கின்றனர். இந்த 60 வீதமான மாணவர்களும் மாலம்பே பல்கலைக்கழக மாணவர்களை விடவும் குறைந்த தகுதியுடைய, குறைந்த வெட்டுப் புள்ளிகளைக்கொண்டவர்களாகும். இதுவே உண்மை. மாறாக மாலம்பே பல்கலைக்கழகத்தில் கொழும்பு, கண்டி, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்கள் உள்ளனர்.
அரச பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே கூறியபடி 60 வீத மாணவர்கள் இவர்களைப் பார்க்கிலும் குறைந்த மட்டத்திலானவர்களே. இந்த நாட்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தனியார் சர்வதேச பாடசாலைகளில் கற்றுவரும் நிலையில் அவர்களுக்கும் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. சில சர்வதேச நிறுவனங்கள் இங்குவந்து தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க முன்வருகின்ற போதிலும், மாலம்பே பல்கலைக்கழகத்திற்கு என்ன நடக்கிறது என்பதை எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. உண்மையில் சுகாதார சேவை சட்டத்தின்படி சுகாதார சபை எடுக்கும் தீர்மானத்தை ஒதுக்கிவைத்துவிட்டு தீர்மானமொன்றை எடுப்பதற்கான அதிகாரம் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு காணப்படுகிறது. எனவே மாலம்பே பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்கி அவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக்கொள்ள  விரும்புகிறேன்” – என்றார்.
SHARE