மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்!

663

 

மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்!
maaveerarnaal_norway

விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாளின் ஞாபகத்தினை அடியொற்றி அனுஷ்டிக்கப்படும் மகத்தான நாளே மாவீரர் தினம் என அழைக்கப்படுகின்றது.

மாவீரர் தினம் ஆரம்பத்தில் அனுஷ்டிக்கப்படுவதற்கும், தற்போது அனுஷ்டிக்கப்படுவதற்கும் ஒரே காரணம் நிச்சியமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாவீரர் தினம் தோன்றியமைக்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருக்கலாம்.

ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது.

1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப்புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.

அவ் வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டு மதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான்.

அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

படுகாயமுற்ற நிலையிலும் கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான்.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை.

அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகு மூலம் கடல்மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது.

தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை.

இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க 27-11-1982 அன்று, மாலை 6.05 மணிக்கு அந்த இளைஞன் இயக்கத்தில் முதற் களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான்.

இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.

இந்நிலையில் அன்று ஒருவனின் மரணத்தில் ஆரம்பித்த மாவீரர் தினமானது இன்று பலரின் நினைவலைகளை ஞாபகப்படுத்தும் தினமாக கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில் 2009 ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் மக்களை பொறுத்த வரையில் இழந்த தமது உறவுகளை ஞாபகப்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமா மாவீரர் தினத்தினை கொண்டாடுகின்றார்கள்? என்றால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒவ்வொரு வருடமும் பேரினத்திற்கு தமது தேவைகளை எடுத்துச்சொல்லும் தினமாகவே மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பேரினம் தமிழினத்தின் தேவைகளை உணர்ந்து, தமிழ் மக்களது தேவைகளை பெற்றுக்கொடுத்திருந்தால் மாவீரர் தினமானது பேரினத்திற்கு நன்றி நவிழும் நாளாகவே தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் நடந்தது என்ன?

தமிழ் மக்களின் சாதாரண கோரிக்கைகளுக்கு கூட கடந்த கால அரசாங்கங்கள் செவிசாய்க்கவில்லை.

மாறாக தமிழின உயிர்களையே சாய்த்தன.

ஆனால் தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ள இச் சூழ்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நன்கு உணர்ந்து தேவைகளை பெற்றக்கொடுக்க முன்வருமானால், எதிர்வரும் மாவீரர் தினம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நன்றி கூறும் நாளாகும் என்பதில் எவ்வ்வித சந்தேகங்களும் இல்லை.

தமிழ் மக்களை பொறுத்த வரை தனது மண்ணில் தான் சுதந்திரமாக வாழும் நாள் வர வேண்டும்.

சிறைபிடிக்கப்பட்ட அனைத்து தமிழ் போராளிகளும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

பறிக்கப்பட்ட காணிகளும், உடைமைகளும் திருப்பி வழங்கப்பட வேண்டும்.

உயிர் அச்சத்தால் பிறந்த நாட்டை விட்டு அந்நிய நாடுகளில் அநாதைகளாக வாழும் தமிழின சொந்தங்கள், மீண்டும் வந்து தமது சொந்த மண்ணில் சோறாக்கி உண்ண வேண்டும்.

இத்தனை எதிர்பார்ப்புக்களில் தான் மாவீரர் தினத்தினை தமிழ் மக்கள் இன்றும் அனுஷ்டிக்கிறார்கள் என்பதே நிஜம்.

தமிழ் மக்களின் மாவீரர் தின எதிர்பார்ப்பு மாண்டவர்களை மீட்டி பார்ப்பது மட்டமல்ல. இனியாவது தமிழ் மக்கள் தனது சொந்த மண்ணில் மார்பு தட்டி வாழவேண்டும்.

இனி பிறக்கும் தமிழ்த்தாயின் செல்ல குழந்தை சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும்.

இரத்தம் படிந்த தமிழின வரலாறு இனியாவது எவ்வித தோட்டாக்களின் சத்தங்கள் இல்லாமல் எழுத பட வேண்டும்.

அதுவரையில் எந்த எதிர்ப்பு வந்தாலும், மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் என்பதே நிஜம்.

ஆயுத கூர்முனையில் மாவீரர் தினத்தை தடுக்கலாம். ஆனால் ஆழமாக வேர்கொண்டுள்ள ஆள் மனது காயங்களை என்றும் தடுக்க முடியாது.

போராட்டமே வாழ்க்கையாகி போன ஆண்டான் அடிமை முறைமையின் எச்சசொச்சங்களை இன்றும் பழக்கமாக்கிக் கொண்டுள்ள பேரினம், பகைமைகளை மறந்து, தோழமையின் வலிமையினை உணர்ந்து, தமிழ் மக்களின் தேவைகளுக்கு முழுமையாக செவி சாய்த்து, உண்மை பௌத்த நெறியின் பிரகாரம் வாழ தலைப்பட்டால், 2016 ம் ஆண்டின் மாவீரர் தினத்தில் தமிழ் மக்கள், உங்களுக்காக சேர்த்து ஒரு விளக்கு ஏற்றுவார்கள்.

உள்ளத்தால் போற்றுவார்கள்.

அதுவரையில் தமிழ் மக்களின் உள்ளத்து தீ காயங்கள் தீபங்களாக ஏற்றப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

SHARE