விசுவமடு பிரதேசத்தில் உள்ள வள்ளுவர்புரம்,மாணிக்கபுரம்,றெட்பானா,இளங்கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார சபையினரின் நடடிக்கை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் நவீன தொலைபேசி பாவனை தெரியாத வயோதிப குடும்பங்களே அதிகளவில் வாழ்ந்து வருகின்ற நிலையில் வீடுகளுக்கு செல்லும் மின்சார சபையின் ஊழியர்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மின் இணைப்பினை துண்டித்து விடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மின் இணைப்பு
இது தொடர்பில் விசாரித்த போது மின்சார கட்டணம் அவர்களின் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
எனினும் அதனை பார்த்து கட்டணத்தொகையினை அறிந்துகொள்ளமுடியாத நிலையில் வயோதிபர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில் வீடுகளின் மின்சார அளவீடுகூட பார்க்காத நிலையில் மின்சாரத்தினை துண்டித்துள்ளனர்.
இவ்வாறு பலரது வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பினை பணம் செலுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன்மின்சார சபையின் இந்த நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.