மின்சார வேலியில் சிக்கிய விவசாயி பரிதாப மாக பலி: கொட்டகலையில் சம்பவம்

623
மிருகங்களிடம் இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியினால்  விவசாயி ஒருவர் உயிரிழந்த பரிதாபகர சம்பவமொன்று கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று  அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை ஹெரின்டன் குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.தர்மலிங்கம் (வயது 63) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் நள்ளிரவில் அதிகரித்திருப்பதால் அச்சத்துடனேயே இரவுப் பொழுதைக் கழித்துவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மரக்கறி பயிற்செய்கையை வாழ்வாதாரமான நம்பியிருக்கும் இவர்களுக்கு காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தினால் தோட்டங்களைப் பாதுகாப்பதற்கு மின்சார வேலையைத் தவிர வேறு வழியில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE