தூரியன் பழத்தை பாதுகாக்க போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கினிகத்ஹேன, பொல்பிட்டிய, ஹிட்டிகே கம புலத்தவத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான குலரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தூரியன் தோட்டத்தை பாதுகாப்பதற்காக தனது தோட்டத்தைச் சுற்றி மின்சார வேலி ஒன்றை அமைத்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த நபர் தனது வீட்டில் குடிநீர் வராத காரணத்தினால் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ள தோட்டப்பகுதிக்கு நீர்க்குழாயை திருத்துவதற்கு சென்ற நிலையில் மின்சார கம்பியில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கினிகத்ஹேன பொலிஸார் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ள தோட்ட உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.