மின்னல் வேக மனிதரின் “ஹாட்ரிக்’ கனவு”ஹாட்ரிக்’ கனவு

174

ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகள் தொடங்கும்போது அனல் பறக்கும் அளவுக்கு பரபரப்பும், விறுவிறுப்பும் கூடவே தொற்றிவிடும். அதிலும் உலகின் மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் களமிறங்கும் அதிவேக ஓட்டங்களான 100 மீ., 200 மீ., ஓட்டங்கள் மற்றும் 4ல100 மீ. தொடர் ஓட்டங்கள்தான் ஒலிம்பிக்கின் உச்சகட்ட “கிளைமாக்ஸ்’.

கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ., 200 மீ. ஓட்டம், 4ல100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றிருக்கும் உசேன் போல்ட், ரியோ ஒலிம்பிக்கிலும் மேற்கண்ட 3 பிரிவுகளிலும் தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்லும் கனவில் களமிறங்குகிறார்.

உசேன் போல்ட்டின் கனவு நனவானால் ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ., 200 மீ. ஓட்டங்கள், 4ல100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை அவருடைய வசமாகும்.

நவீன ஒலிம்பிக்கின் நாயகன்: அமெரிக்காவின் முன்னாள் தடகள ஜாம்பவான் கார்ல் லீவிஸ், ஒலிம்பிக்கில் 9 தங்கப் பதக்கம் வென்றிருந்தாலும்கூட, அதில் 4 தங்கம், நீளம் தாண்டுதல் மூலம் கிடைத்ததாகும். அதேநேரத்தில் 100 மீ. ஓட்டத்தில் 2-ஆவது முறையாக தங்கம் வென்ற அவரால், 200 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை தக்கவைக்க முடியவில்லை. உசேன் போல்ட் தடகள வீரராக உருவெடுப்பதற்கு ரோல் மாடலாக இருந்தவரான மற்றொரு அமெரிக்க தடகள ஜாம்பவான் மைக்கேல் ஜான்சன், ஒலிம்பிக்கில் 400 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்தபோதும், 200 மீ. ஓட்டத்தில் அது சாத்தியமாகவில்லை.

ஆனால் உசேன் போல்ட், நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் என இரண்டிலுமே தங்கப் பதக்கத்தை தக்கவைத்த முதல் வீரர் ஆவார். இதுதவிர நவீன ஒலிம்பிக்கில் அதிவேக ஓட்டத்தில் 6 தங்கப் பதக்கங்களை வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

தடகளத்தில் நேரத்தைக் கணக்கிட மின்னணு கருவி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் உலக சாதனை படைத்த முதல் வீரரும் போல்ட்தான். அந்த இரு உலக சாதனைகளும் இன்றளவும் அவரிடமே

உள்ளன. இதேபோல் 4ல100 மீ. தொடர் ஓட்டத்திலும் உசேன் போல்ட் உள்ளிட்டோர் அடங்கிய அணியே உலக சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் காயத்தால் அவதிப்பட்ட உசேன் போல்ட், கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற தடகளப் போட்டியின் 200 மீ. ஓட்டத்தில் 19.89 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் முழு வலிமையோடு களத்துக்கு திரும்பியிருப்பதை தடகள உலகிற்கு உணர்த்தியிருப்பதோடு, அமெரிக்க தடகள வீரர்களையும் பீதியில் உறைய வைத்திருக்கிறார்.

கேட்லின் சவால்: ரியோ ஒலிம்பிக்கில் 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் உசேன் போல்ட்டுக்கு அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 2012 ஒலிம்பிக்கிற்கு பிறகு ஒரேயொரு முறை மட்டுமே 100 மீ. ஓட்டத்தில் ஜஸ்டின் கேட்லினிடம் தோற்றுள்ளார் போல்ட்.

2013, 2015-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கோலோச்சிய போல்ட், 100 மீ., 200 மீ. ஓட்டம் மற்றும் 4ல100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றிருக்கிறார். ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றுகளில் எப்போதுமே அசைக்க முடியாத வீரராக வலம் வந்திருக்கும் போல்ட்டை ஒருபுறம் காயம் சற்று அச்சுறுத்துகிறது. மறுபுறம் ஜஸ்டின் கேட்லின் கொஞ்சம் மிரட்டுகிறார்.

2004 ஒலிம்பிக்கில் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றவரான ஜஸ்டின் கேட்லின், அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் 100 மீ. ஓட்டத்தில் 9.80 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார். இதுதான் 100 மீ. ஓட்டத்தில் இந்த ஆண்டின் “ஃபாஸ்டஸ்ட் டைம்’.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் போல்ட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் கேட்லின். 34 வயது ஆனபோதும், கேட்லினின் ஓட்டத்தில் வேகம் குறையவில்லை.

கேட்லின் இரு முறை ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியவர். இது அவருக்கு மிகப்பெரிய அவமானத்தை தேடித்தந்தது. அதனால் மிகுந்த வேதனையடைந்துள்ள கேட்லின், இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தன் மீதான களங்கத்தைத் துடைப்பதற்கு தீர்வாக இருக்கும் என நம்புகிறார். எனவே அவர் வெறியோடு செயல்படலாம். அது போல்ட்டுக்கு கடும் சவாலாக அமையலாம்.

கனவு பலிக்குமா? 200 மீ. ஓட்டத்திலும் போல்ட்டுக்கும், கேட்லினுக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4ல100 மீ. தொடர் ஓட்டத்தில் போல்ட் இடம்பெற்றிருக்கும் ஜமைக்க அணி தங்கம் வெல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் போல்ட்டுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், அது ஜமைக்க அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். 29 வயதான போல்ட்டுக்கு சவாலை எதிர்கொள்வது புதிதல்ல. ஆனால் அவர் முன் இருக்கும் மிகப்பெரிய சவால் காயம்தான். அதைத்தாண்டி அவர் எப்படி சாதிக்கப் போகிறார்?

தனது கடைசி ஒலிம்பிக்கில் களமிறங்கும் போல்ட், காயத்திலிருந்து தப்பினால் சாதனை அவரிடம் இருந்து தப்பாது என நம்பலாம். உசேன் போல்ட்டின் கனவு பலிக்குமா?bolt

SHARE