மீண்டும் ‘2.0’ வெளியீடு தள்ளிப் போகிறதா?அக்‌ஷய்குமார் அறிவிப்பால் உருவாகியுள்ள சர்ச்சை

227

ஜனவரி 26ம் தேதி ‘பேடுமேன்’ வெளியாகும் என அக்‌ஷய்குமார் அறிவித்திருப்பதால், ‘2.0’ வெளியீடு மீண்டும் மாற்றியமைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.பால்கி இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேடுமேன்’. இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியீடு என படத்தின் போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அக்‌ஷய்குமார்.

இத்தகவலால் ‘2.0’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியிருக்கிறது. தீபாவளி வெளியீட்டிலிருந்து, கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 26ம் தேதி வெளியீடு என்று லைகா நிறுவனம் தெரிவித்தது.

‘2.0’ படத்தில் ரஜினிக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அக்‌ஷய்குமார். ஒரே தேதியில் அவரது நடிப்பில் 2 படங்கள் வெளியாவது என்பது சாத்தியமில்லை.

முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் ‘2.0’ உருவாகி வருவதால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்கள். இதனை முழுமையாக முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிட்டால், இப்படத்தின் பொருட்செலவுக்கும் சரியாக இருக்கும் என படக்குழு கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், ‘2.0’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறித்து எந்தவொரு தகவலையும் இதுவரை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மீண்டும் ‘2.0’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறித்த தகவலால் ரஜினி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

SHARE