யாழ்ப்பாணத்திலுள்ள 31 நலன்புரி முகாம்களையும் எதிர்வரும் ஓஸ்ட் மாதத்திற்குள் மூடுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய அந்த முகாம்களில் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக 971 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழரை ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதிலும், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள 31 நலன்புரி முகாம்களில் இன்னமும் 971 குடும்பங்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் 641 குடும்பங்கள் காணியற்றவர்களாக இருப்பதாகவும் யாழ் மாவட்ட செயலாளர் அலுவலகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இதனாலேயே இந்த மக்களுக்கு இன்னமும் மீளக்குடியமர முடியாத நிலை தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகினற்து.
இந்த நிலையில் இந்த மக்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் துரித கதியில் மீளக் குடியமர்த்துவதற்காக 971 மில்லியன் ரூபா செலவில் நிலையான வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனைத் திட்டமொன்றை புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால்அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கு அமைய காங்கேசன்துறை மற்றும் பலாலி ஆகிய பிரதேசங்களிலுள்ள அரச காணிகளில் எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னதாக 204 வீடுகள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்தக் கட்டமாக 767 குடும்பங்களுக்கான காணிகள் அடையாளம் காணப்பட்டு அந்தக் காணிகளில் நிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார்.
உள்ளக இடப்பெயர்வு காரணமாக கடந்த 26 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்தவரும் குடும்பங்களின் பிள்ளைகள் திருணம் செய்து புதிய குடும்பங்களாக மாறியுள்ள நிலையில், அவர்களுக்கு சொந்த காணிகள் இல்லாத நிலையிலேயே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலுள்ள கோணாபுலம் அகதிகள் முகாமிற்கு சென்றிரந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஆறு மாத காலத்திற்குள் முகாம்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதாக அளித்த வாக்குறுதிக்கு அமையவே இந்தத் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக இடம்பெயர்ந்த நிலையில் மீளக்குடியமர முடியாதிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய 12 கிலோ மீற்றர் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கம் மீள்குடியேற்றக் குழுவின் தலைவர், குறித்த பிரதேசத்தை இராணுவமும், கடற்கடையினரும் கையகப்படுத்தி வைத்துக்கொண்டு அவற்றை விடுவிக்க மறுத்து வருவதாகவும் விசனம் வெளியிட்டார்.
இந்தப் பிரதேசத்திலேயே இயற்கை மீன்பிடித்துறையான மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அமைந்துள்ளது.
மயிலிட்டி மீன்பிடித்துறையை விடுவித்து, அதனை அண்டிய கடற்கரைப் பிரதேசத்தை சுதந்திரமாக பயன்படுத்த மக்களுக்கு இடமளிக்காது விட்டால் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்பார்க்கும் நல்லிணக்க இலக்கை அடைய முடியாது என்றும் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது….