முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

265
முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  தொடங்கொட, போம்புவல பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீதே நேற்று இரவு 11.30 அளவில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பாதையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.

எனினும் இதனை கவனத்தில் கொள்ளாமல் முச்சக்கரவண்டி சென்றுள்ளதால் பொலிஸார் இதனை மோட்டார்வண்டியில் பின் தொடர்ந்து சென்று குறித்த முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளனர்.

இதேவேளை முச்சக்கரவண்டியின் சாரதியும், மற்றமொரு நபரும் பொலிஸாரை தள்ளிவிட்டு குறித்த இடத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த முச்சக்கரவண்டியின் சாரதியும்,மற்றைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் இருவரும் இராணுவத்தில் பணி புரிந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் கைது செய்யப்படும் போது மது அருந்திய நிலையில் இருந்ததாகவும், இவர்களிடமிருந்து கஞ்சா பொதி ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

shot bu pistol_91359

SHARE