முதலமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது உண்மையென்றால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.

501

vikgeneswaran

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அரசியல் ரீதியான காரணங்களுக்காக கோரினால் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரனவிதாரண தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“முதலமைச்சருக்கு உயிர் அச்சுறுத்தல் உண்டு, அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என அண்மைக்காலமாக பலரும் கேட்கின்றனர். உண்மையிலேயே அவருக்கு பாதுகாப்பு வேண்டுமா என்று அரசாங்கம் கவனம் செலுத்தும்.

அவ்வாறு அச்சுறுத்தல் உள்ளது உண்மையானால் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தும்.

ஆனால் வெறும் அரசியல் தேவைகளுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ பாதுகாப்பு கேட்கப்படுமானால் அதை அரசு பெற்றுக்கொடுக்காது எனவும் கருணாரத்ன பரனவிதாரண குறிப்பிட்டார்.

தொடர்ந்து, நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய எதிர்ப்புத் தடைச்சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த புதிய சட்டத்தினால், உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அச்சுறுத்தல் தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE