மாகாண முதலமைச்சர்கள் மாநாடு இன்று ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹிக்காட்ரான்ஸ் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்முறை நடைபெறும் முதலமச்சர்கள் மாநாடு 32ம் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணசபைகளுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தினால் இழைக்கப்படும் அநீதிகள் குறத்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்படும் என வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறுகையில…
குறிப்பாக வட மத்திய மாகாண மாணவர்களுக்கு போதியளவு ஆசிரியர்கள் கிடையாது, இந்த விடயம் குறித்து மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தோம். எனினும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இந்த பிரச்சினை ஏனைய மாகாணங்களிலும் காணப்படுகின்றது.
மத்திய அரசாங்கத்தினால் கல்வி அமைச்சிற்கு 90,000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை கல்வி அமைச்சு உரிய முறையில் பயன்படுத்துவதில்லை.
மாகாண பாடசாலைகளுக்கு மட்டுமன்றி தேசிய பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்னேரிய தேசிய பாடசாலையில் மட்டும் 27 ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு என்பது அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது தெரிய வந்தது.
வட மத்திய மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை சேர்த்துக் கொள்ளும் நோக்கில் பரீட்சைகள் திணைக்களம் போட்டிப் பரீட்சை நடாத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும் கல்வி அமைச்சு அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக இந்த பரீட்சை நடத்தப்படவில்லை என பேசல ஜயரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.