முதல்வர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவை நிகழ்வில் பங்கேற்க கூடாது: ஆளும்கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வலியுறுத்தல்

295

 

தமிழ் மக்கள் பேரவை தமது அரசியல் தீர்வு திட்ட முன்வரைபை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடவுள்ள நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொள்ள கூடாது என மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்கள் 20பேர் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றை இன்றைய தினம் மாலை முதலமைச்சரிடம் கையளித்துள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவை நாளைய தினம் அரசியல் தீர்வு திட்ட முன்வரைபை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து பொதுமக்களிடம் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் மேற்படி நிகழ்வில் முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையினையே ஆளும்கட்சி உறுப்பினர்கள் 20 பேர் முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு வடமாகாணசபை பேரவை செயலகத்தில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் தலமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடைய கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தின் அடிப்படையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டு முதலமைச்சரிடம், வழங்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது என முதலமைச்சரை வலியுறுத்தும் கோரிக்கை கடிதத்தில் வடமாகாணசபையின் 3 அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கையொப்பமிட்டே மேற்படி கடிதம் மாலை 7.30 மணிக்கு முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அக்கடித்தத்தில், அரசியல் தீர்வுத்திட்டம்” தொடர்பிலான வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கூட்டான நிலைப்பாடு. கடந்த 20-01-2016 அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் பேரவைத்தலைவர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ உறுப்பினர்கள் (வடக்கு மாகாண சபை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) உடனான விசேட சந்திப்பின்போது மூன்று முக்கிய விடயங்கள் குறித்துப் பேசப்பட்டது.

வினைத்திறன் மிக்க மாகாணசபையாக செயற்படுதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுதல், அரசியலமைப்பு விடயத்தில் வடக்கு மாகாணசபையின் பங்குபற்றுதல் என்பனவே அவையாகும்.

அதன்போது உறுப்பினர்கள் எகோபித்த குரலில் “அரசியலமைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் அரசியல்தீர்வு முன்மொழிவுகள் விடயத்தில் செயற்படுவது அக்கறை முரண்பாடான நிலைமையைத் தோற்றுவிக்கும் என்பதை வலியுறுத்தி நின்றார்கள்.

இந்த நிலையில் 21-01-2016 அன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கான விசேட சந்திப்பிலும் மேற்படி விடயம் வலியுறுத்திக்கூறப்பட்டது.

தாங்களும் தங்களுடைய உரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை முற்றாக ஏற்றுக்கொள்வதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத்திட்டத்தை நோக்கிய முன்னெடுப்புகளில் எமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுத்திட்டம் எமது மக்களுக்கு கிடைப்பதற்கு நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் அரசியல் அடையாளத்தோடு ஒருங்கிணைந்து செயற்படவேண்டும். என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன்  மிகத் தெளிவான வார்த்தைகளில் பின்வரும் விடயங்கள் குறித்து குறிப்பிட்டிருந்தார்; இம்முறை முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டத்தை நாம் மக்களின் முன்வைப்போம்; அவர்கள் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அதனை நாம் ஏற்றுக்கொள்வோம்.

சமஷ்டி என்பதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் எமக்கு முன்னால் கிடையாது, மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நாம் முழுமையான விருப்பத்தோடு இருக்கின்றோம், மக்கள் தமது கருத்துக்களை, அவை முன்வைக்கப்பட வேண்டிய சபைகளில் முன்வைக்கலாம். அதற்கான முயற்சிகள் அனைத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும். என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஏகோபித்து ஏற்றுக்கொண்டார்கள். மக்களின் கருத்துக்களை அறியும் எல்லா முயற்சிகளையும் நாம் வரவேற்கின்றோம். அதில் எமக்கு எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது.

இவ்வாறான சூழலில் வடக்கு மாகாணசபையின் கௌரவ உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாணசபையின் முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கென மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்படவேண்டும் என பிரேரிக்கப்பட்டு, கடந்த 26-01-2016 பேரவையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

மேற்படி எல்லா சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தப்பட்ட முக்கிய விடயமாக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடையாளத்தோடு, கொள்கைகளோடு மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட பிரதிநிதிகள் எவரும்; அந்த ஆணையை வேறு அரங்கங்களிலோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தக்கூடாது.

வேறுதளங்களில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை உள்வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற மக்கள் ஆணையைப் பெரும்பான்மையாகப் பெற்றிருக்கின்ற எமது கட்சி கருத்து வேற்றுமைகள் அங்கீகரிக்கின்ற உயர் பண்பைக் கொண்டிருக்கின்றது.

மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகத் தன்மையை எமது கட்சியின் பலவீனமாக கருதுவதும் அல்லது கட்சிக்குள் பாரிய பிளவுகள் இருப்பதாக வெளிக்காட்டும் விதத்திலும் செயற்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் அல்ல.

அந்தவகையில் எதிர்வரும் 31-01-2016 அன்று “தமிழ் மக்கள் பேரவை” என்னும் ஓர் அமைப்பு “அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு” ஒன்றினை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடும் ஆரம்ப நிகழ்வு ஒன்றினை தங்களுடைய தலைமையில் நடாத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம்.

மேற்படி செயற்பாட்டினை முன்னெடுக்கும் முழுமையான உரித்தும், பொறுப்பும் மேற்குறித்த அமைப்பிற்கு, அல்லது அவைபோன்ற இன்னும் பல அமைப்புகளுக்கு இருப்பதை நாம் முழுமையாக அங்கீகரிக்கின்றோம். அவர்களது முயற்சிகளை வரவேற்கின்றோம். அதில் எம்மிடையே எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அத்தகைய செயற்பாட்டின் தலைமைப்பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடையாளத்தோடு மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட வடக்கு மாகாணசபையின் முதலமைச்சராகிய தாங்கள் ஏற்றிருப்பதை எக்காரணம் கொண்டும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும்,

அது அரசியல் ரீதியான அக்கறை முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் பலத்தை மலினப்படுத்தும் செயற்பாடாகவுமே இருக்கும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் தங்களுடைய மேற்படி செயற்பாடுகளுடன் எம்மால் ஒத்துழைக்க முடியாது என்பதையும், அதனை நாம் முழுமையாக ஆட்சேபிக்கின்றோம் என்பதையும் இத்தால் தங்களின் கவனத்திற்கு பணிவுடன் கொண்டு வருகின்றோம் என அக் கடிதத்தில் வலியுறுத்தப் பட்டிருக்கின்றது.

இதேவேளை முதலமைச்சர் நாளை கூட்டத்தில் கலந்துகொள்ளும் பட்சத்தில் வடமாகாணசபையில் ஆழும்கட்சிக்கிடையில் இருந்துவரும் விரிசல் நிலை மேலும் வலுவடையும் என வட மாகாண சபையினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று விரைவில் வரும் என அண்மைய நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE