நவி மும்பையில் தொடங்கிய மகளிர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 410 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் நவி மும்பையில் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய மகளிர் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா 17 ஓட்டங்களிலும், ஷாபாலி வெர்மா 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து சொதப்பினர்.
ஆனால் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் இங்கிலாந்து பந்துவீச்சை சோதித்தனர். சுபா சதீஷ் (Shubha Satheesh) 69 ஓட்டங்களிலும், ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) 68 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 49 ஓட்டங்கள் எடுத்தார். யஸ்டிகா பாட்டியா 66 ஓட்டங்கள் விளாசினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 410 ஓட்டங்கள் குவித்துள்ளது.
தீப்தி சர்மா (Deepti Sharma) 60 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் தரப்பில் லாரென் பெல் 2 விக்கெட்டுகளும், கேட், நட் சிவர், சார்லோட் மற்றும் எக்லெஸ்டோன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.