முன்னாள் அமைச்சர் டிரோன் பெர்னாண்டோவின் பிறந்ததினமான இன்று அவரின் உருவச்சிலை திறந்துவைப்பு.

234

மொரட்டுவையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் டிரோன் பெர்னாண்டோவின் பிறந்ததினம் இன்றாகும்.

அன்னாரது பிறந்த நாளான இன்று அவரது உருவச் சிலையொன்றும் திறந்து வைக்கப்படவுள்ளதுடன். குறைந்த வருமானம் பெறும் 1500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகள் கையளிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் பிரித்தானியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரபுரன் அப்புவின் (பிரான்ஸிஸ்கோ பெர்னாந்து) குடும்ப வாரிசு டிரோன் பெர்னாண்டோ ஆவார்.

அரச அதிகாரியான ஷெல்டன் சீ. பெர்னாண்டோ, எட்னா பெர்னாண்டோ தம்பதியினருக்கு மகனாக டிரோன் பெர்னாண்டோ 1941 ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கண்டியில் பிறந்தார். டிரோனின் பாட்டன் வழிமுறையான வீரபுரன் அப்பு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி என்பதும் சிப்பம்சமாகும். அதுவும் கண்டியில் தான் நிகழ்ந்தது.

கல்கிசை சென் தோமஸ் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் தமது கல்வியை ஆரம்பித்த டிரோன், அவரது 18வது வயதில் மேற்படிப்பிற்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டதாரியாகி அத்துடன் பாரிஸ்டர் தரத்தை அடைந்து இதழியல் டிப்ளோமாவையும் முடித்துக்கொண்டு 1967 ஆம் ஆண்டு வழக்குரைஞராக தாய்நாடு திரும்பினார்.

இங்கிலாந்தில் கல்வி கற்கும் காலத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைகக்ழகத்தில் அதன் தொழிற் சங்க தலைவராக டிரோன் தெரிவாகினார். அந்த தொழிற்சங்க தலைவராக தெரிவான முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையும் அவருக்கு சொந்தமானது. இவருக்கு முன்பு இப்பதவியை வகித்த இருவரும் பிரித்தானிய பிரமர்களாக இருந்த எட்லி, கேட்ஸ் கல் ஆகியோர்களாவர்.

இலங்கைக்கு வந்த டிரோன் அரச வழக்கறிஞராக பதவிபெற்று, சட்டமா அதிபர் காரியாலயத்தில் பணியாற்றினார். தொடர்ந்து பணியாற்றி இருந்தால் சட்டமா அதிபராக அல்லது பிரதம நீதியரசராக நியமனம் பெற்றிருக்கலாம். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் டிரோனும் ஒரே நாளில் சட்டமா அதிபர் பணியனையில் கடமைக்கு இணைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

டிரோன் அவரது 32வது வயதில் சட்டமா அதிபர் காரியாலயத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்றிவிட்டு அங்கிருந்து விடைபெற்று 1973 ல் அன்றைய அரசியல் தலைவர்களுள் ஒருவரான ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐ. தே. க. அரசியல் அணியில் இணைந்தார். இதன் மூலம் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 15,000 அதிகபடியான வாக்குகளால் மொறட்டுவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

1977 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மொறட்டுவைக்கு நல்ல அபிவிருத்தி திட்டங்களை செய்து முடித்தார். முன்னாள் அமைச்சர் ஏ. ஸீ. எஸ். ஹமீத் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலப் புபதியில் பதில் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சராக பணியாற்றினார்.

உதவி அமைச்சர், இராஜாங்க அமைச்சர், திட்ட அமைச்சர், அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றினார். சட்ட சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர், தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மற்றும் 2002 ல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராகவும் டிரோன் பணியாற்றினார்.

மொறட்டுவை தொகுதிகளின் நலன் கருதி டிரோன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்து முடித்தார். சுமார் 6 கிலோ மீற்றர் தூரமான புதிய காலி வீதி தொகுதியை அமைத்தார். கடலரிப்பிலிருந்து கரையோர மக்களை பாதுகாக்க வெளிநாட்டு உதவியுடன் கருங்கற்களினால் பாதுகாப்பு அரண் உருவாக்கினார். கட்டுபெத்தை சொய்சா கிரிக்கெட் விளையாட்டரங்கை, உலகிலே 67 வது தரத்திலுள்ள மைதானமாக ஏற்படுத்தினார்.

புதிய பாடசாலைகள் மூன்று அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 1000 வீடுகளை மொறட்டுவையில் அமைத்து மக்களுக்கு கையளித்தார். ஒவ்வொரு பிரிவிற்கும் (கிராம அடிப்படையில்) வரவேற்பு மண்டபங்களை ஸ்தாபித்தார்.

சகல வசதிகளுடனும் வாசிகசாலைகள், மின்சார இணைப்பு, நீர் விநியோகத் திட்டம், மக்கள் மத்தியில் அமைதி ஏற்படுத்த பொலிஸ் காவல் அரண்கள், நீதிமன்றம், கூட்டுறவுக் கடைகள், வர்த்தக கட்டடத் தொகுதிகள், சிறுவர் பூங்காக்கள் என்பன அமைத்ததுடன், இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு என்பனவும் பெற்றுக் கொடுத்தார். இவை அனைத்தையும் மொறட்டுவை தொகுதி மக்கள் இன்றும் பெருமையுடன் நினைவு கூருகின்றனர்.

நம் நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக சிறப்பான பணியை நிறைவேற்றினார்.

இவ்வாறான அளப்பரிய பணிகளை செய்த மக்கள் நன்மதிப்பை பெற்ற அரசியல்வாதியான டிரோன் 2008 பெப்ரவரி 26 ஆம் திகதி மொறட்டுவை பொல்கொட வாவிக்கு அருகில் அமைந்திருந்த அவரது இல்லத்தில் மரணமானார்.

டிரோன் பெர்னாந்து நினைவு கமிட்டி, எக்ஸ்போ 80 பணியகம் என்பன இணைந்து உருவாக்கியுள்ள அமரர் டிரோனின் உருவச் சிலை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இன்றைய நினைவு நாள் வைபவங்களில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரும், ஐ. தே. க. வின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச, பிரதி நிதியமைச்சரும் மொறட்டுவை தொகுதியில் ஐ. தே. க. வின் பிரதான அமைப்பாளருமான இரான் விக்ரமரத்ன, அமரர் டிரோனின் புதல்வி திஹானி உட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

SHARE