முன்னாள் அமைச்சர் ராஜரட்ணம் பிறந்த வீட்டுக்கு சென்ற விவியன் பாலகிருஸ்ணன்!

187

சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சர் சின்னத்தம்பி ராஜரட்ணம் பிறந்த வீட்டை, சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

ராஜட்ணத்தின் தற்போதைய தலைமுறை உறவினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்று, யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுப் பொருள்களைப் பரிசளித்தனர்.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக 1980ம் ஆண்டு தொடக்கம் 1985ம் ஆண்டு வரையில் சின்னத்தம்பி ராஜரட்ணம் பணியாற்றினார்.

இவர், சபாபதிப்பிள்ளை சின்னத்தம்பியின் புதல்வனாக 1915ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி யாழ். சித்தங்கேணியில் பிறந்தார்.

சின்னத்தம்பி மலேசியாவில் வசித்து வந்த போதும் மண்பற்றுக் காரணமாக, அவரது பெற்றோர் சித்தங்கேணிக்கு வந்த போதே ராஜரட்ணம் பிறந்தார். அதன் பின்னர் கோலாலம்பூரில் ராஜரட்ணம் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று வருகை தந்தார்.

தனது பயணத்தின்போது, சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக, வெளியுறவுத்துறை அமைச்சராக, சிங்கப்பூரின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட லீகுவான் யூவின் முக்கிய ஆலோசகராகச் செயற்பட்ட ராஜரட்ணம் பிறந்த வீட்டைப் பார்வையிட வேண்டும் என்று விரும்பினார்.

சித்தன்கேணி பன்னமூலையில் அமைந்துள்ள ராஜரட்ணம் பிறந்த வீட்டை நேற்று மாலை 4.10 மணிக்குச் சென்றடைந்த அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், அங்கு சுமார் 15 நிமிடங்கள் வரையில் நின்றிருந்தார்.

ராஜரட்ணத்தின் சகோதரியின் உறவினர்களே தற்போது அந்த வீட்டில் வசிக்கின்றனர். அவர்கள், அமைச்சரை சிறப்பாக வரவேற்றனர்.

அமைச்சரின் குழுவினர் செவ்விளநீர் பருகக் கொடுக்கப்பட்டது.ராஜரட்ணத்தின் நால்சார் வீட்டில் அமைச்சர் குழுவினர் படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இறுதியில், அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நினைவுப் பரிசில்களை வழங்கினார். அதேபோன்று வீட்டாரும் அவருக்கு நினைவுப் பரிசில்களை வழங்கினர். உணவுப் பொருள்களுடன், மாதுளம்பழத்தையும் அவருக்கு கொடுத்தனர்.

 

 

SHARE