சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும், கொடிகாமம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியுமான சிந்திக்க பண்டார நேற்று இரவு கொழும்பில் வைத்து பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐந்து இளைஞர்கள் மீது திருட்டுக்குற்றம் சுமத்தி சுன்னாகம் பொலிசார் கைது செய்து இருந்தனர்.
அதில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் என்கிற இளைஞனை அடித்து சித்திரவதை செய்து பொலிஸார் கொன்றனர். உடலை கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் வீசி எறிந்து விட்டு அதனை தற்கொலை என்று முடித்துக் கொண்டனர்.
அதன் பின்னர் இவர்களுக்கெதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அதில் சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்திக்க பண்டார உட்பட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
நீதிமன்ற நடவடிக்கையை அடுத்து 8 பொலிஸாரும் தலைமறைவாகிய நிலையிலேயே நேற்றிரவு சிந்திக்க பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியினைப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட துன்னாலையைச் சேர்ந்த தமிழ் பொலிஸார் ஒருவர் தனது உறவினர் ஊடாக இவ்வழக்கு தொடர்பிலும், நீதிபதி தொடர்பிலும் இணையமூடாக தவறான தகவல்களை பரப்பி வருவதோடு, வழக்கை திசை திருப்பும் நோக்கில் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றார்.
நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இவர் துன்னாலை கள்ளுத் தவறணைக்கு சுதந்திரமாக சென்று தினமும் கள்ளுக் குடித்து வருவதாகவும் அறிய முடிகிறது.
சாதாரண சிறு சிறு குற்றவாளிகளை பாய்ந்து பிடித்துவரும் பொலிஸார், தற்போது கொலைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் பம்முவது ஏன்?
இன்றைய காலப்பகுதியில் இலங்கையின் அரசியல், பொலிஸ் உயர்மட்ட கொலைகள், ஊழல்கள் என்பன வெளியே கொண்டுவரப்பட்டு அந்த வழக்குகள் சரியான திசையில் நடந்து வரும் நிலையில், ஏற்கனவே பல வழக்குகளில் முன்மாதிரியான தீர்ப்புக்களை வழங்கி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஆனந்தரராஜா இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியினை பெற்றுக் கொடுப்பார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.