முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மட்டுமே பாதாள உலகக்குழுவின் செயற்பாடுகளை இல்லாதொழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பாதாள உலகக்குழுக்களை இல்லாதொழிக்கும் வல்லமை மஹிந்தவிற்கே உண்டு.
அமைச்சரவை அமைச்சர்கள், பாதாள உலகக் குழுக்களை பாதுகாத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார். இது அரசாங்கத்தை பற்றி என்ன வெளிப்படுத்துகின்றது.
வடக்கில் போதைப்பொருள் கடத்தல்களுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு உண்டு என முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
விஜயகலா தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்திருந்த போதிலும், அண்மையில் வடக்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் ரணிலுடன் பங்கேற்றிருந்தார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.