முன்னாள் ஜனாதிபதி அடுத்த பொது தேர்தலில் போட்டியிட விரும்பினால், உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
போட்டியிடும் பதவி குறித்து கட்சிக்கு விண்ணப்ப பத்திரம் ஒன்றை சமர்பிக்க வேண்டும். அத்துடன் அவர் எந்த மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறார் என்பதையும் விண்ணப்ப பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடைமுறை இதுதான். இதனைவிடுத்து கட்சி எந்த வேட்பாளரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்காது.
ஏற்கனவே பிரதமர்களாக பதவி வகித்த ரட்ணசிறி விக்ரமநாயக்க, மகிந்த ராஜபக்ச. டி.எம். ஜயரத்ன ஆகியோரில் எவரும் அவ்வாறு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் அல்ல.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்த பலர் எதிர்ப்பார்த்துள்ளனர். அதற்கு நாங்கள் எந்த விதத்திலும் இடமளிக்க மாட்டோம்.
நாங்கள் ஒற்றுமையாக செயற்படுவோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபட்டால், அதனால், ஐக்கிய தேசிய கட்சியே சாதகமான நிலைமை ஏற்படும் என்பதை கட்சியினர் அறிவர் எனவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.