முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றை இன்று மாலை நடத்தவுள்ளார்.
பத்தரமுல்லை நெளும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் குறித்த சந்திப்பு மாலை மூன்றரை மணியளவில் நடைபெறவுள்ளது.
இதன்போது வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை பிரதேசங்களில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், அவர்களை தன் பக்கம் வென்றெடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பினை மஹிந்த தரப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்த தகவல்கள் போதுமான முறையில் ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் மஹிந்தவின் தற்போதைய ஊடகப் பிரிவு காணப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் அஸ்வர் இதனை வழிநடத்துவதாக அறியக் கிடைத்துள்ளது.
அஸ்வர் கடந்த காலங்களில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ளார்.
இது மஹிந்தவுக்கான பிரச்சார நடவடிக்கைகளிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. எனினும் மஹிந்தவின் தமிழ் ஊடக விவகாரங்களை கவனித்த முன்னாள் ஒருங்கிணைப்பு அதிகாரி அஷ்ரப் அலீ தற்போது மஹிந்த தரப்பை விட்டும் தூரமாகி நிற்பதும் மஹிந்தவின் தமிழ் விவகாரங்களுக்குப் பாரிய இழப்பாகும்என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இன்றைய கலந்துரையாடலுக்கு மஹிந்த தரப்பின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் பெருமளவான முஸ்லிம்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.