முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயலல்ல

288

 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயலல்ல என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் கோத்தபாய கடந்த திங்கட்கிமையன்று 24ஆம் திகதியன்று சாட்சியமளிக்க சென்றிருந்தார். இதன்போது அவருக்கு பொலிஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியதாக கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த பிரசன்னத்தின் போது கோத்தபாய 5 மணித்தியாலங்களாக விசாரணை செய்யப்பட்டார். இவ்வாறு குற்றச்சாட்டுக்காக சாட்சியம் அளிக்க வரும் ஒருவருக்கு இலங்கை பொலிஸ் வணக்கம் செலுத்தியமை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை விசாரணைக்காக கோத்தபாய வாகனத்தில் வந்து இறங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் இது ஒரு சாதாரண விடயம் என்று கூறிவிட்டே விசாரணைக்கு சென்றுள்ளார். அரச பாதுகாப்பு நிறுவனமான ரக்னா ஆரக்சக்க லங்கா நிறுவனத்தின் பணியாளர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தியமை மற்றும் அரச நிதியை சொந்த தேவைக்கு பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களே கோத்தபாய மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் கோத்தபாயவுக்கு வணக்கம் செலுத்தப்பட்ட விடயம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகரவின் கருத்தை அறிய முயற்சிக்கப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.
SHARE