முன்னாள் போராளிகள், தமிழ் அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை முதல் அமுல்!

355

 

வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
denis1

இன்றைய தினம் காலை மேற்படி செயற்றிட்டம் தொடர்பில் அமைச்சின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

கடந்த 2014.12.19ம் திகதி மாகாணசபையில் தொடக்கி வைக்கப்பட்ட மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் கேட்கப்பட்டிருந்த நிலையில்
சுமார் 12676 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பாக முன்னாள் போராளிகளிடமிருந்து 6322 விண்ணப்பங்களும், மாவீரர் குடும்பங்களிடமிருந்து 6030 விண்ணப்பங்களும், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களிடமிருந்து
324 விண்ணப்பங்களும் எமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

இதற்கமைப எமது அமைச்சுக்கு ஊடாக 46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் 324ற்கும் நிரந்தர வாழ்வாதார உதவிகளை
வழங்குவதற்கான செயற்றிட்டம் நாளைய தினம் நடைமுறைக்கு வருகின்றது.

மேலும் மிதமாகவுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் 2ம் கட்டமாக நடைமுறைக்கு வருகின்றது. இந்நிலையில் மேற்படி செயற்றிட்டத்திற்கு உதவியளிப்பதற்கு பல புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு தூதுவராலயங்களும் முன்வந்திருக்கின்றன.

எனினும் நிரந்தர வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு நிதி பற்றாக்குறை போதாமலிருக்கின்றது. இந்நிலையில் எமது கண்காணிப்பின் கீழ் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் மேற்படி வகைப்பாட்டிலுள்ள, பயனாளிகளுக்கு நேரடியாகவும் எமக்கு ஊடாகவும் உதவிகளை வழங்க முடியும்.

நான் கிராமிய அபிவிருத்தி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் பல கிராமங்களுக்குச் சென்றிருந்த போது அங்கே முன்னாள் போராளிகள், இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த, மாவீரர்களுடைய
குடும்பங்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகி வறுமையோடு வாழ்ந்து கொண்டிருப்பதை நேரடியாக கண்டு மனவேதனையும், கோபமும் அடைந்த நிலையிலேயே இந்த
திட்டத்தை முன்மொழிந்தோம்.

இந்நிலையில் இந்த செயற்றிட்டம் வெற்றிகரமானதாக இப்போது நடைமுறைக்கு வருகின்றது. இதற்கு அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

SHARE