முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஊழல்களை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி மைத்திரிக்கு நாட்டமில்லை என்பது நேற்று தெளிவாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, சம்பிக ரணவக ஆகிய மூவரும் இணைந்து அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்கள்.
முன்னைய அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விரைவுபடுத்த வேண்டும் என்று குறித்த அமைச்சரவைப் பத்திரம் வலியுறுத்தியிருந்தது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனக்கு இருக்கும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை ஒருதலைப்பட்சமாக நிராகரித்துள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை பொருத்தமான இடம் அல்லவென்றும் , அமைச்சர் ராஜித தலைமையிலான குழுவினர் தன்னிடம் தனியாக கலந்துரையாட வருமாறும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் இந்த அரசாங்கம் அக்கறையற்று இருப்பதாக ஊழலுக்கு எதிரான முன்னணி உள்ளிட்ட சிவில் அமைப்புகள் குற்றம் சாட்டிய ஓரிருநாட்களில் மைத்திரியின் உண்மை முகம் அம்பலப்பட்டுள்ளமை சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.