ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 34 ஆவது போட்டியில் தனது சொந்த ஊரில் வைத்து டெல்லி அணி மும்பை அணியிடம் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து மும்பையின் தொடர் வெற்றிக் கணக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தது மும்பை.
டெல்லி கெபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார்.
இதையடுத்து, மும்பை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டி கொக் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் 30 ஓட்டங்களுடனும் டி கொக் 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து பென் கட்டிங் 2 ஓட்டங்களுடனும் சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை எடுத்தது. குருணால் பாண்டியா 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இதையடுத்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 128 ஓட்டங்களை எடுத்து மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.
டெல்லி அணியில் அதிக பட்சமாக பிரித்வி ஷா 20 ஓட்டங்களையும் தவான் 35 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியா தெரிவுசெய்யப்பட்டார்.