எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதற்கான விடை இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் கூட்டமைப்பின் தலைவருக்கும் சபாநயகர் சமல் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது.
இவ்விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது தேசிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு ஆகியன காணப்படுகின்றன.
இந்நிலையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில் மூன்றாவதாக அதிக ஆசனங்களைக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உள்ளது.
ஆகவே பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக அந்தப் பதவி முறையாக அறிவிக்கப்படுமாகவிருந்தால் எமக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உரியதாகும்.
இன்றைய தினம் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்சவுக்கும் எனக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுமானால், அது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அதேநேரம் எமக்கு கிடைக்காது விட்டால் அது குறித்து நாம் கவலைப்படப் போவதுமில்லை. நாம் தொடர்ந்தும் மக்கள் சார்பாக உறுதியாக நியாயமாக செயற்படுவோம் என்றார்.