முல்லைக்கு புதிய அரச அதிபர்- கூட்டுச்சதியை அம்பலப்படுத்தினார் முதலமைச்சர்!

264

 

சர்ச்சைக்குரிய கொக்கிளாய் விகாரை அமைப்பிற்கான அனுமதி வழங்கியமை, காணி பங்கீடு உள்ளிட்ட பல மோசடிகளில் தொடர்புபட்ட சர்ச்சைக்குரிய நபரான கரைதுறைபற்று பிரதேச முன்னாள் செயலாளரை முல்லைதீவு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபராக நியமிக்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாக வடமாகாண முதலமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார். இலங்கை அரசின் இச்சதி முயற்சியின் பின்னணியினில் தமிழ் அரசியல் தரப்பினை சேர்ந்தவர்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தினால் நேற்று திங்கட்கிழமை (12) வெளியிட்டு வைக்கப்பட்ட மணலாற்றின் நிலசுவீகரிப்பின் ஆவணப்படுத்தலான இருளுள் இதயபூமி வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு முதல் பிரதியை அவர் பெற்றுக்கொண்டு உரையாற்றுகையினிலேயே அவர் இக்குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். ஊடக அமையத்தின் செயலாளர் விக்கினேஸ்வரன் கஜீவன் உத்தியோகபூர்வமாக ஆவணப்படத்தை முதலமைச்சரிடம் கையளித்திருந்தார்.

கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் முதலமைச்சர் கருத்து வெளியிடுகையில் சர்ச்சைக்குரிய கொக்கிளாய் விகாரை அமைப்பிற்கான அனுமதி வழங்கியமை உள்ளிட்ட பல மோசடிகளில் தொடர்புபட்ட முன்னாள் கரைதுறைபற்று பிரதேச செயலாளர் எமது தலையீடுகளின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அதே நபர் பதவியுயர்வுடன் முல்லைதீவு அரச அதிபராக நியமிக்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.அவ்வாறு குறித்த நபர் அரச அதிபராக நியமிக்கப்பட்டால் முல்லைதீவு சூறையாடப்படுவதை தடுக்க முடியாதெனவும் முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

SHARE