முல்லைத்தீவு, துணுக்காய் சிறாட்டிக் குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சொகுசு பஸ் ஒன்றில் கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகளை, வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் திங்கட்கிழமை (04) இரவு கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, பஸ் சாரதி கைது செய்யப்பட்ட அதேவேளை, வாகன உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் தப்பித்துச் சென்றுள்ளனர்.
கைப்பற்றப்பற்ற மரக்குற்றிகள் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சொகுசு பஸ்ஸின் பயணிகள் இருக்கைகள் அனைத்தும் கழற்றப்பட்டு, அதற்குள் முதிரை மரக்குற்றிகள் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்களில் கஞ்சா உள்ளிட்ட கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.