இந்தநிலையில், மேற்படி சிலை அமைப்புக்கான முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.
மாவீரன் பண்டாரவன்னியன் சிலை வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பில் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மட்டுமே அமைக்கப்பட்டிருந்த நிலையில்,
ஒட்டுசுட்டான் பகுதியில் பண்டாரவன்னியனின் சிலை போருக்குப் பின்னர் அமைக்கப்பட்டது. எனினும் குறித்த சிலை திட்டமிட்டு விசமிகளால் இடித்து வீழ்த்தப்பட்டது.
இந்நிலையில் புதிதாக வாள் ஏந்திய நிலையில் பண்டாரவன்னியனின் சிலை முல்லைத்தீவு நகரில் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள சுற்றவட்டத்தில் அமைக்கப்படவேண்டும் என்ற பிரேரணையினை முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கடந்த 2014.02.10ம் திகதி நடைபெற்ற மாகாணசபை அமர்வில் முன்மொழிந்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
எனினும் குறித்த விடயம் தொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் 2015.02.24ம் திகதி நடைபெற்ற மாகாணசபை அமர்வில் மீள நினைவுறுத்தலை ரவிகரன் சபையில் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பில் மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டதுடன், முல்லைத்தீவு நகரில் உள்ள சுற்றவட்டத்தில் அமைப்பதற் கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் தற்போது முல்லைத்தீவு நகரில் மாவட்டச் செயலகத்திற்கு பின்பாக உள்ள பழைய கோட்டை பகுதியில் இந்தக் கோட்டை பண்டாரவன்னியனால் வெற்றி கொள்ளப்பட்டதாக வரலாறுகள் சுட்டிக்காட்டும் நிலையில் கோட்டை பகுதியை அண்டியதாக மாவட்டச் செயலக வளாகத்திற்குள் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்விடயம் குறித்து முல்லை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, முல்லைத்தீவு நகரில் (மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உள்ள சுற்றவட்ட பகுதியில்) பண்டாரவன்னியனின் வீரத்தை குறிக்கும் வகையில் வாள் ஏந்திய சிலை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்,
வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக அதற்கு அனுமதி வழங்காததுடன், அந்தப் பகுதி சிலை அமைப்பதற்கு இடப்பற்றாக்குறை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இதனால் பண்டார வன்னியனால் வெற்றி கொள்ளப்பட்ட அந்நியரின் கோட்டைக்கு முன்பாக பண்டாரவன்னியனின் சிலையை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்.
மேலும் சிலை அமைப்பதற்கான பணமும் எமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் மிக விரைவில் சிலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.