முல்லைத்தீவில் 271 சிங்களக் குடும்பங்கள்…..??

326

Muli

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் வசித்தனர் என்று கூறும் ஒரு தொகுதி சிங்களக் குடும்பங்கள் தம்மை மீள்குடியேற அனுமதிக்குமாறு மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்ததுரையாடல் கடந்த திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் வடக்கு மாகாண மீள்குடியேற்ற அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட வேண்டிய மீள்குடியமர்வுகள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. அதன் போது மேற்குறிப்பிட்ட விடயமும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வசித்தனர் என்று குறித்த 271 குடும்பங்களும் கூறுகின்றன. நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக தாம் இடம் பெயர்ந்து சென்றனர் என்றும், தற் போது மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலருக்கு அந்தக் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள் குடியேற்றங்கள் குறித்து ஆராயப்படும் சந்தர்ப்பத்தில் இந்த விடயம் குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்வது என்று கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது.

SHARE