முல்லைத்தீவில் 9 நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைப்பு

214

முல்லைத்தீவு – மாந்தை பகுதியில் 9 நீர்ப்பாசனக்குளங்கள் மற்றும் நீர்ப்பாசனக்கால்வாய்கள் புனரமைப்பு வேலைக்கள் ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்தப் பணிகள் நடைபெற்று வருவதாக பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நாகராஜா சுஜீபரூபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள 9 நீர்ப்பாசனக்குளங்களின் புனரமைப்பு வேலைகளுக்கும் மற்றும் நீர்ப்பாசனக்கால்வாய்கள் புனரமைப்பு ஆகிய வேலைக்களுக்காக இரண்டு கோடியே 77 இலட்சம் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

தேசிய மற்றும் ஒருமைப்பாட்டுக்கான நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீடு 65 இலட்சம் ரூபா மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிதி மூலம் வடகாடு குளம் 50 இலட்சம் ரூபா செலவிலும், கிடாய்பிடித்தகுளம் புனரமைப்பு வேலைகள் 15 இலட்சம் ரூபா செலவிலும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 65 இலட்சம் ரூபா நிதி முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாகக் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிதியுதவியுடன் கல்லிருப்புக்குளம் புனரமைப்பு வேலைகள் நடைபெறவுள்ளன. மீள்குடியேற்ற அமைச்சின் நடப்பாண்டுக்குரிய நிதியொதுக்கீடான ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா நிதி மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிதி மூலம் வன்னி விளான்குளம் புனரமைப்பு 24 இலட்சம் ரூபா செலவிலும், கிடாய்பிடித்தகுளம் புனரமைப்பு 27 இலட்சம் ரூபா செலவிலும்,புதுக்குளம் புனரமைப்பு 30 இலட்சம் ரூபா செலவிலும், சிராட்சி குளம் புனரமைப்பு 16 இலட்சம் ரூபா செலவிலும், இளமருதங்குளம் புனரமைப்பு 25 இலட்சம் ரூபா செலவிலும், தெகிழங்குளம் புனரமைப்பு 30 இலட்சம் ரூபா செலவிலுமாக மொத்தம் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், குளங்களின் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ள பகுதி கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் இணைந்து குழு வேலைகள் தொடர்பில் கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளன.

மேலும்,வேலைகளில் ஏதும் குறைபாடுகள் காணப்படின் நேரடியாகவோ தனக்கு தபால் மூலமாகவோ தனக்கு உடனடியாக அறியத்தருமறு பாண்டியன்குளம் கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

SHARE