முல்லைத்தீவு, கைவேலி மருதமடுவில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, தாய் தொழில் நிமிர்த்தம் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் மனநோயாளியான தந்தையுடன் வீட்டில் இருந்த 6 வயது சிறுமியை 38 வயதான தாய் மாமனும் 18 வயதுடைய அவரின் சகாவும் இணைந்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளனர்.
எனினும் சிறுமி கூக்குரல் இட்டதையடுத்து அயலவர்களால் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான துஷ்பிரயோகம் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக உடன் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவேண்டும். வித்தியாவின் கொலைக்கு பின்னர் நாடெங்கிலும் மாணவர் எழுச்சி ஏற்பட்ட பின்னரும் கூட இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கு பகுதியில் துஷ்பிரயோக செய்ற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதற்கு என திரைமறைவில் சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றது. எனவே, இவ்வாறானவர்கள் சமூகத்தில் இனம் காணப்படுவதுடன் குற்றங்கள் புரிவோரும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.