வடமாகாண சபையினை மீண்டும் குத்தகைக்கு எடுக்க கங்கணம் கட்டி நிற்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, சுதந்திரபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 20ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாள் ஒரு மறக்கமுடியாத நாள். ஈழத்தமிழர் விடுதலை போராட்டம் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட அடையாளத்தினை செய்த நாளாக அன்று நடந்தேறியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய நாள் காலை விடிந்த பொழுது இந்த நிலத்தினை நோக்கி பல பகுதிகளில் இருந்து ஆட்லறிகளை ஒருங்கிணைத்து சேர்த்து மண்கிண்டி மலையில் இருந்தும், அம்பகாமத்தில் இருந்தும் மல்ரிபரல்களை பரீட்சார்த்தமாகவும், விமான தாக்குதல்களையும் ஒருங்கிணைத்து இந்த மண் ஒரு அவலத்தினை கண்ட நாள். அன்று நான் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையின் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடைமையாற்றிக்கொண்டிருந்தேன்.
அதனால் தான் சொல்கின்றேன் இந்த தாக்குதல் ஒரு துரோகத்தனத்தின் அடையாளமாக அமைந்துள்ளது.
அன்று குறிப்பிட்ட பத்தாம் திகதிக்கு முதன்நாளே புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து ஜ.சி.ஆர்.சி, எம்.எஸ்.எப் நிறுவன பணியாளர்கள் உடனடியாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டு இருந்தது எமக்கு அடுத்த நாள்தான் தெரியவந்தது.
இவர்கள் எவருமே இந்த மண்ணில் இருக்கவில்லை என்று அன்று நான் உலகிற்கு இந்த விடயத்தினை ஊடகம் ஊடாக பதிவு செய்திருந்தேன்.
எங்கள் மக்களுக்கு முன்னெச்சிரிக்கை செய்யவேண்டிய நிறுவனங்கள் கூட காட்டிக்கொடுத்து இந்த படுகொலை அமைந்ததற்கு காரணமாக அமைந்துள்ளமை கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசினை பொறுத்தவரை தமிழர்களை இனப்படுகொலை செய்த வரலாறுகள் பல புரிந்துள்ளது. சுதந்திரபுரம் மண்ணும் அதற்கு அடையாளமாக இருக்கின்றது.
வலிகள் கண்ட மண்ணில் மீண்டும் ஒரு விடுதலையினை நோக்கி மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதை நோக்கி வடமாகாண சபையினை நாம் அமைத்திருந்தோம். ஆனால் அதிலும் தவறு விட்டோமோ என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது.
வலி சுமந்தவன் ஒருவன்தான் வட மாகாண சபையினை வழிநடத்துபவனாக இருக்கவேண்டும். அதைவிட்டு வட மாகாண சபையினை குத்தகைக்கு எடுத்தவர்களால் இன்று நாம் சிக்கலுற்றுக் கொண்டிருக்கின்றோம்.
வடமாகாண முதலமைச்சரை குத்தகைக்கு பொறுப்பெடுத்தவர்கள் இன்று மீண்டும் ஒரு தடவை ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுப்பதற்கு கங்கணம் கட்டி நிக்கின்றார்கள் அது எங்களுக்கு பிரச்சினை அல்ல.
இன்று மக்களை உடைத்து தூள்தூள் ஆக்கி ஒரு பொறுப்பினை எடுப்பதற்கு முயற்சிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றால் நான் இந்த மண்ணில் இருந்தவர் இந்த மண்ணில் மக்களுக்காக இருந்து மக்களுடன் வாழ்தனான். இந்த மக்களுக்கு இருக்கும். வலி எங்களுக்கும் இருக்கும்
இந்த நிகழ்வை குழப்ப கூட ஒருசில முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது எங்கள் உணர்வு சம்மந்தப்பட்டது. நாம் உணர்வற்ற ஜடங்களாக இந்த மண்ணில் வாழ்வதாக இல்லை என்பதை எங்கள் மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.